சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட முக்குலத்தோர் புலிப்படை கட்சி தலைவரும், எம்.எல்.ஏ-வுமான நடிகர் கருணாஸ், காவல்துறையினரையும், தமிழக முதல்வரையும் இழிவாக பேசியதாக நுங்கம்பாக்கம் போலீசார் தாமாக முன்வந்து அவர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு கைது செய்தனர். பின் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இதற்கிடையே, கருணாஸ் மீது மேலும் இரண்டு வழக்குகள் போடப்பட்டது. இதனையடுத்து, கருணாஸ் அளித்த ஜாமீன் மனு மீதான விசாரணை சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் கடந்த 29-ந்தேதி வந்த போது அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி நீதிபதி உதவிட்டார். இதனையடுத்து, வேலூர் சிறையில் இருந்து அவர் விடுதலை செய்யப்பட்டார்.
இதற்கிடையே, கடந்த ஆண்டு நெல்லை மாவட்டம் புளியங்குடியில் உள்ள நெற்கட்டும் செவலில் புலித்தேவன் நினைவிடத்தில், கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ந்தேதி கருணாஸ் மாலை அணிவிக்க சென்ற போது, கருணாஸின் ஆதரவாளர்களுக்கும், தேவர் பேரவை தலைவர் முத்தையா தேவரின் ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் வெடித்தது.
இந்த மோதலில், பல வாகனகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதில் இருவர் மீதும் வழக்குகள் பதியப்பட்டன. இந்த வழக்கை தற்போது கையில் எடுத்துள்ள நெல்லை போலீசார் இரு தினங்களுக்கு முன் கருணாஸை கைது செய்ய முயற்சி செய்து வருகின்றனர். இதனையறிந்த கருணாஸ் தலைமறைவானதாக தகவல் வெளியாகிய நிலையில், நேற்று காலை சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் நெஞ்சுவலி காரணமாக கருணாஸ் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கருணாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறிது நேரத்தில், கருணாஸ் தரப்பு வழக்கறிஞர் சட்டசபை செயலாளரிடம் மனு ஒன்றை அளித்தார். அதில், ”சபாநாயகர் பதவியிலிருந்து தனபாலை நீக்க வேண்டும் என்றும், சபாநாயகர் ஒருதலை பட்சமாக செயல்படுவதாகவும், சட்டப்பேரவையை கூட்டி தனபாலை தலைவர் பதவியிலிருந்து நீக்குமாறும்” அந்த மனுவில் வலியுறுத்தி இருந்தது.
சட்டசபை கூடும்போது இந்த மனு முதல் அஜண்டாவில் வைக்கப்படும். இந்த மனுவுக்கு 35 பேர் ஆதரவு கொடுத்தால், இந்த மனு மீதான விவாதம் நடைபெறும். இல்லையெனில், விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படாது.
கருணாஸுக்கு, திமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவுதந்தால் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் விவாதத்துக்கு வரும், எனவே, கருணாஸுக்கு ஆதரவு தருவது குறித்து திமுகவை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகனிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, ”திமுக-விடம் கருணாஸ் ஆதரவு கேட்டால், அந்த நேரத்தில் கட்சி மேலிடம் இதை பரிசீலிக்கும்” என்று பதிலளித்துள்ளார்.
முன்னதாக சபாநாயகரிடம், கருணாஸ் மீது கட்சி தாவல் தடை சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கும்படி கொறடா ராஜேந்திரன் பரிந்துரை செய்திருந்தார். இந்த மனுவும் சபாநாயகரின் ஆய்வில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.