இலங்கையில் யாழ்ப்பாணம் உள்ளிட்ட பல பிரதேசங்களில் கனதியான மழை பொழியக்கூடிய வாய்ப்புக்கள் காணப்படுவதாக இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேற்படி திணைக்களம் இன்றைய தினத்திற்காக வெளியிட்டுள்ள வானிலை அறிக்கையிலேயே இந்த விடயத்தைச் சுட்டிக்காட்டியுள்ளது.இதுதொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
வடமேல், வடமத்திய, மத்திய, ஊவா, மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் யாழ்ப்பாண மாவட்டத்திலும் 100 மி.மீக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.மேற்கு, தெற்கு மற்றும் வடக்கு கரையோரப் பிரதேசங்களில் பல இடங்களில் காலை வேளையிலும் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் சில பிரதேசங்களில் காலை வேளையில் பனிமூட்டம் எதிர்பார்க்கப்படுகிறது.இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.
நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பல இடங்களில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
யாழ்ப்பாணத்திலிருந்து புத்தளம், கொழும்பு, மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது மாறுபட்ட திசைகளிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 15-20 கிலோ மீற்றர் வரை காணப்படும்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக் கடற்பிரதேசங்கள் கொந்தளிப்பாகவும் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.இதேவேளை பலத்த மழை பெய்யும் சந்தர்ப்பத்தில் ஏற்படக்கூடிய வெள்ளப்பெருக்கு தொடர்பில் மக்கள் அவதானத்துடன் செயற்படவேண்டும் என எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.