தலைக்கவசம் அணியாமல் சென்ற போலீசார்…..

தலைக்கவசம் நம் உயிர் கவசம் என்று கூறுவதை யாரும் கேட்காத காரணத்தினால் தான், சென்னை உயர்நீதிமன்றம் தலைக்கவசம் அணிவது கட்டாயம் என்று உத்தரவு பிறப்பித்தது.

இதனை கடமைக்கு பின்பற்றாமல், நம் உயிருக்கு பாதுகாப்பு என்று பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய நாம் அதனை பின்பற்றுவதில் இன்றளவும் அலட்சியம் செய்து வருகின்றோம்.

இதன் காரணமாக தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனம் ஓட்டும் பலர் விபத்தில் சிக்கி பரிதாபக தங்களது உயிரை விடும் நிலை உருவாகிறது.

இந்நிலையில், விருதுநகர் அருகே தலைக்கவசம் அணியாமல் சென்ற காவலர் ஒருவரின் வாகனம் விபத்தில் சிக்கி பரிதாபமாக அந்த காவலர் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

விருதுநகர் மாவட்டம், தொம்பக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 28). இவர் ராஜபாளையம் 11-வது பட்டாலியனில் காவலராக பணியாற்றி வருகிறார். இவர் தினமும் தனது இருசக்கர வாகனத்தில் பணிக்கு சென்று வருவது வழக்கம்.

இந்நிலையில், நேற்று இரவு காவலர் ரமேஷ் பணி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார். ஆலங்குளம் பகுதி சாலை அருகே வந்த போது அவரை இருசக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில், காவலர் ரமேஷின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டு, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். தகவல் அறிந்த ஆலங்குளம் காவல்நிலைய போலீசார் அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த ஆலங்குளம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.