ஒரு சில மாதங்களுக்கு முன் தமிழகமும் கேரள மாநிலத்தை போல பயங்கர மழை பாதிப்புக்கு ஆளாகும் என்று புயல் ராமச்சந்திரன் பஞ்சாங்கத்தின் மூலம் கணித்துள்ளார். அக்டோபர் மாதத்திற்கு பிறகு தமிழகத்தின் வடபகுதியான மதுராந்தகத்திற்கு அடுத்து ஆரம்பித்து தென் தமிழகம் வரை மழையின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
மழை நிற்க வேண்டி யாகம் நடத்தும் அளவிற்கு மழைப்பொழிவு இருக்கும் என்றும், இப்போது இருந்தே அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் தான் பாதிப்பை ஓரளவிற்காவது கட்டுப்படுத்த முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.
அவர் கூறியது போலவே வானிலை ஆய்வு மையம் தமிழகத்திற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று இந்திய மற்றும் சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”வரும் நாட்களில் தமிழகம் முழுவதும் மிதமான மழை இருக்கும். வரும் 7 ஆம் தேதி அதிகபட்சமாக தமிழகத்தில் 25 செ.மீ வரை வரை கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும் என்றும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் தெரிவித்தது. இதனால் தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்படுகிறது” என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேபோல், சென்னை வானிலை ஆய்வு மையம் வருகின்ற 5 மற்றும் 6 ஆம் தேதிகளில் தமிழகம் முழுவதும் உள் மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என கூறி வந்த நிலையில் தற்போது டெல்லி வானிலை ஆய்வு மையத்தில் இருந்து தமிழகத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
தற்போதுள்ள வானிலை முன்னெச்சரிக்கை வெறும் சில மணி நேரத்தில் மட்டுமே விடுக்கப்படுவதால், பாதிக்கும் மேற்பட்ட மக்கள் பேரிடர் சூழ்நிலையில் வெளியேற முடியாமல் சிக்கி விடுகின்றனர்.
அறிவியலையும் மீறி பஞ்சாங்கம் சில நம்பிக்கைகள் அவ்வப்போது தலைகாட்டினாலும், இதனை மூட நம்பிக்கையாக எடுத்துக்கொள்ளாமல், ஒருவேளை இப்படியொரு இயற்கை பேரிடர் நடந்தால் அதிலிருந்து மக்களை காக்க எனென்ன நடவடிக்கை எடுக்கலாம் என்று அரசு யோசித்து செயல்பட்டால், அது போன்ற இக்கட்டான சூழல் நிலவும் போது எந்த வித சலனமும் இன்றி செயல்பட முடியும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.