முதல் சதத்தை இவருக்காக சமர்ப்பிக்கிறேன்!. இளம் வீரர் பிரித்வி ஷா!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, 2 டெஸ்ட் போட்டி, 5 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

நேற்று குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில், இந்தியாவின் கே.எல் ராகுல் – பிரித்விஷா துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கே.எல் ராகுல் ரன்கள் ஏதும் எடுக்காமல் அவுட்டாகி வெளியேறினார்.

நிதானமான ஆட்டத்தினை வெளிப்படுத்திய இளம் வீரர் பிரித்விஷா தன்னுடைய அறிமுக போட்டியிலே 100 ரன்களை விளாசி சாதனை படைத்தார். தன்னுடைய இளம்வயதில் அறிமுக போட்டியிலே சதமடித்த இந்திய வீரர்களில் பிரித்விஷா, சச்சினுக்கு அடுத்த இடத்தினை பிடித்துள்ளார்.

இந்நிலையில் சதம் குறித்து பிரித்வி ஷா கூறுகையில், ‘இங்கிலாந்து தொடருக்கே நான் களமிறங்க தயாராக இருந்தேன். ஆனால் வாய்ப்பு இப்போது தான் கிடைத்திருக்கிறது. முதல் முறையாக சர்வதேச போட்டியில் ஆடியதில் ஆரம்பத்தில் கொஞ்சம் பதட்டம் இருந்தது.

பின்னர், 10-15 ஓவர்களுக்கு பிறகு இயல்பாக விளையாட தொடங்கினேன். கணிசமான பவுண்டரிகளும் அடித்தேன். முடிந்த வரை ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்ற உறுதியுடன் செயல்பட்டேன்.

சதத்தை எட்டியதும் எனது நினைவுக்கு முதலில் வந்தவர் எனது தந்தை தான். எனக்காக அவர் நிறைய தியாகங்கள் செய்திருக்கிறார். இன்னும் செய்து கொண்டிருக்கிறார். எனக்கு எல்லா வகையிலும் அவர் பக்கபலமாக இருக்கிறார். அவருக்கு இந்த சதத்தை அர்ப்பணிக்கிறேன்.