யாழ்ப்பாணத்தில் பணியாற்றிய உதவிப் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள் 5 பேர் நேற்று அதிரடியாக பணியில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் உத்தரவுக்கு அமைவாக இந்த இடைநிறுத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று தெரியவருகின்றது.
கடந்த புதன் கிழமை யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பெருங்குற்றப் பிரிவினருக்கு கூண்டோடு இடமாற்றம் வழங்கப்பட்டிருந்தது. ஒருவர் பணி இடைநிறுத்தப்பட்டிருந்தார்.நேற்று 5 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கடந்த மாதம் 24ஆம் திகதி யாழ்ப்பாண நகரிலுள்ள வர்த்தக நிலையத்தில் 10 லட்சம் ரூபா பெறுமதியான பொருள்கள் களவு போயுள்ளன. கடை உரிமையாளர் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையப் பெருங்குற்றப் பிரிவில் முறைப்பாடு செய்துள்ளார்.
அங்கு கடமையிலிருந்த சார்ஜன் தர அதிகாரி, பதிவேட்டுப் புத்தகத்தில் வெளியில் செல்வதற்கான பதிவுகள் எதனையும் மேற்கொள்ளாது சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளார். விவரங்களைத் தனது குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
ஆனால் குற்றப் பதிவு புத்தகத்தில், தனது குறிப்புப் புத்தகத்தில் பதிவு செய்ததை அவர் ஒட்டவில்லை. 26ஆம் திகதியே அதை ஒட்டியுள்ளார்.
இரண்டு நாள்களாக விசாரணை செய்யப்படவில்லை என்பதைக் கடை உரிமையாளர் விடயத்தை வடக்கு மாகாண மூத்த பிரதிப் பொலிஸ்மா அதிபரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார். அவரின் பணிப்புக்கு அமைவாக யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தலைமையில் விசாரணைக் குழு நியமிக்கப்பட்டது. விசாரணை இடம்பெற்றது.
விசாரணையின்போது இந்த விடயங்கள் கண்டு பிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் பெருங்குற்றப் பிரிவில் பணியாற்றிய 17 பொலிஸாருக்கு உடனடியாக இடமாற்றம் வழங்கப்பட்டது. சார்ஜன் தரத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் பணி நிறுத்தம் செய்யப்பட்டார்.
தொடர்ந்தும் விசாரணைகள் நடந்தன. பதிவேட்டுப் புத்தகத்தில் வெளியில் செல்வதற்கான பதிவுகள் எதனையும் மேற்கொள்ளாது சம்பவ இடத்துக்குச் சென்ற சார்ஜனுடன் யாழ்ப்பாணப் பொலிஸ் நிலையத்தில் பதில் பொலிஸ் அதிகாரியாகக் கடமையாற்றிய உதவிப் பொலிஸ் அதிகாரியும் சென்றார் என்பது தெரியவந்தது. அதையடுத்து அந்த அதிகாரியும் நேற்றுப் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளார்.
அண்மையில கொடிகாமம் பகுதியில் பொலிஸ் வாகனத்தைத் திருடிச் சென்ற சம்பவம் தொடர்பில் கவனக்குறைவாகச் செயற்பட்டனர் என்ற குற்றச்சாட்டில் அந்த வாகனத்தில் சென்ற நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது.