தமிழக அரசியலில் கடந்த இரு தினங்களாக போட்டி போட்டுக்கொண்டு தினகரனும் ஓபிஎஸ்-ம் மாறி மாறி பேட்டி கொடுத்து வருகின்றனர்.
இறுதினங்களுக்கு முன், எடப்பாடி பழனிசாமியின் ஆட்சியை கவிழ்ப்பது தொடர்பாக தினகரனை ஓபிஎஸ் சந்தித்ததாகஅமமுக அமைப்பு செயலாளர் தங்க.தமிழ்ச்செல்வன் பரபரப்பு தகவலை வெளியிட்டு இருந்தார்.
நேற்று செய்தியாளர்களை சந்தித்த அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் துணை பொது செயலாளர் தினகரன், ”கடந்த 2017 ஆண்டு ஜூலை மாதம் 12 ஆம் தேதி துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் வேண்டுகோள் வைத்ததன் படி அவரை சந்தித்தேன் என்றும், அப்போது அவர் என்னிடம், தான் செய்தது தவறு என்றும், பழனிசாமியை எதிர்க்க என்னுடன் சேர்வதாகவும் கூறினார்.
மேலும், கடந்த செப்டம்பர் மாதம் இறுதி வாரத்தில் என்னை சந்திக்க துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் நேரம் கேட்டார். மேலும், அவர் எடப்பாடி பழனிசாமியை இறக்கிவிட்டு, என்னை முதல்வராக்க பன்னீர்செல்வம் விரும்பினார்” என்றும் தினகரன் பரபரப்பு பேட்டியளித்து இருந்தார்.
தினகரனின் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்கும் விதமாக நேற்று இரவு 7 மணி அளவில் செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தினகரன் தன் மீது பொய்யான குற்றச்சாட்டை சுமத்தி இருக்கிறார் என்றும், நான் தினகரனை சந்தித்தது உண்மைதான், அந்த சந்திப்பு தினகரனின் நண்பரின் விருப்பத்தின் பெயரிலே நடந்தது. அந்த சந்திப்பில் தினகரன் தான் எடப்பாடியை பதவியில் இருந்து இறக்க வேண்டும் என்று கூறினார். இந்த சந்திப்பை ஏற்படுத்தியதற்காக அந்த நண்பர் என்னிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்”. என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய ஓபிஎஸ், ”மத்திய அரசோடு கூட்டு சேர்ந்து ஆட்சியை கலைக்கப் பார்ப்பதாக தினகரன் என் மீது குற்றச்சாட்டு கூறி வருகிறார். நான் இருக்கும் இயக்கத்துக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என நினைப்பவன். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அனைத்து தில்லுமுல்லுகளையும் செய்து மக்களை ஏமாற்றியவர் தினகரன். நினைத்த காரியம் இதுவரை நடக்கவில்லையே என்ற மனக்கவலையுடன் தினகரன் குழப்பத்தில் உள்ளார்” என்றும் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில், இன்று மதியம் செய்தியாளர்கள் சந்தித்த தினகரன் ஓபிஎஸ் இன்னும் மூன்று மாதத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் என்னை சந்திக்க தூது விட்டது உண்மை என்பதை அவர் வாயால் சொல்ல வைப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய தினகரன், ”பன்னீர்செல்வம் துரோக சிந்தனை உள்ளவர், முதல்வராக முயற்சித்து வருகிறார் என்றும், துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஏன் என்னை ரகசியமாக வந்து பார்க்க வேண்டும்? என்று கேள்வி எழுப்பினர். கடந்த செப்டம்பர் இறுதி வாரத்தில் தன்னை சந்தித்தது உண்மைதான் என 3 மாதங்களில் பன்னீர்செல்வம் ஒப்புக்கொள்வார் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தன்னை துணை முதல்வராக்க தமிழக அமைச்சர்கள் வேலுமணியும், தங்கமணியும் விரும்பினர் என்றும் தினகரன் தெரிவித்துள்ளார்.