கணவரை கழுத்தை அறுத்துக்கொன்ற மனைவி..

கேரள மாநிலத்தில் கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை கள்ளக்காதலுடன் சேர்ந்து கொலை செய்த மனைவியை போலீசார் கைது செய்தனர்.

கொலை செய்யப்பட்ட கணவர், மனைவி, கள்ளக்காதலன்

கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் தானூரை சேர்ந்தவர் சாகத் (வயது 34). மீன் வியாபாரி. இவரது மனைவி சவுஜத் (30). இவர்களுக்கு 4 வயதில் ஒரு குழந்தை உள்ளது.

இந்நிலையில் சவுஜத்துக்கும் அதே பகுதியை சேர்ந்த பஷீர் (32) என்பவருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டது. இருவரும் பல இடங்களுக்கு சென்று உல்லாசமாக இருந்ததாக தெரிகிறது. பஷீர் வேலைக்காக வெளிநாடு சென்று விட்டார். வெளிநாடு சென்றபோதும் செல்போன் மூலம் கள்ளக்காதல் ஜோடி காதலை தொடர்ந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழ்வது என்று முடிவு செய்தனர். இதற்கு தடையாக உள்ள கணவரை கொலை செய்ய திட்டம் வகுத்தனர். இதற்கு உதவுவதாக பஷீரின் நண்பர் ஒப்புக்கொண்டார்.

திட்டப்படி பஷீர் வெளிநாட்டில் இருந்து விமானம் மூலம் கண்ணூர் வந்தார். கண்ணூர் விமான நிலையத்தில் அவரது நண்பர் காருடன் காத்திருந்தார். பின்னர் இருவரும் இரவு 11 மணியளவில் சவுஜத்தின் வீட்டுக்கு சென்றனர். சவுஜத் கதவை திறந்து வைத்திருந்தார்.

அப்போது சாகத் தனது 4 வயது குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தார். திறந்த வீட்டுக்குள் புகுந்த பஷீர் நேராக சாகத்தின் அறைக்குள் சென்றார். அங்கு தூங்கிய சாகத்தின் தலையில் இரும்பு கம்பியால் ஓங்கி ஓங்கி அடித்தார்.தந்தையின் அலறல் சத்தம்கேட்டு குழந்தை அழுதது. குழந்தை அழுவதை கண்ட தாய் மற்றும் கள்ளக்காதலன் குழந்தையை மீட்டு மற்றொரு அறையில் அடைத்தனர்.

ரத்தவெள்ளத்தில் மயங்கி கிடந்த சாகத்தை மீண்டும் இரும்பு கம்பியால் பஷீர் பலமுறை தாக்கினார். இறந்துவிட்டதாக நினைத்து பஷீர் வேகமாக காரில் புறப்பட்டு சென்று விட்டார்.

சிறிது நேரத்தில் மயக்கம் தெளிந்த சகாத் உடலை மெதுவாக அசைத்தார். அப்போது இன்னும் உயிர் பிரியவில்லையே என்ற ஆத்திரமடைந்த மனைவி மீன் வெட்டும் அரிவாளை எடுத்து கணவரின் கழுத்தை அறுத்து துண்டாக்கினார். இதில் ரத்தம் பீறிட்டு அறை முழுவதும் பரவியது. சிறிது நேரத்தில் சகாத்தின் உயிர் பிரிந்தது.

பின்னர் மர்ம நபர் கணவரை கொலை செய்து விட்டதாக கூறி கதறி அழுதார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தனர். இது குறித்து தானூர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் சாகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது குறித்து வழக்குப்பதிவு செய்து மனைவி சவுஜத்திடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார். இதில் சந்தேகம் அடைந்த போலீசார் சவுஜத்திடம் தீவிர விசாரணை நடத்தியபோது கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ கணவர் இடையூறாக உள்ளதாக நினைத்து வெளிநாட்டில் இருந்த கள்ளக்காதலனை விமானத்தில் வரவழைத்து கொன்றதை ஒப்புக் கொண்டார். இதற்கு பஷீரின் நண்பரும் உடந்தையாக இருந்ததாக கூறினார்.

இதனையடுத்து சவுஜத் மற்றும் கொலைக்கு உதவிய பஷீரின் நண்பரை போலீசார் கைது செய்தனர். கள்ளக்காதலன் பஷீரை போலீசார் தேடி வருகிறார்கள்.