ஸ்ரீவில்லிப்புத்தூரை அடுத்து வாழைக்குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் முனீஸ்வரன். இவரது மனைவி ரேவதி. இவர்களுக்கு திருமணமாகி 10 ஆண்டுகள் ஆன நிலையில் 9 வயதில் சாதனா என்ற பெண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை பிறந்ததிலிருந்தே மன வளர்ச்சி இல்லாமல் இருந்துள்ளது. ஆனால் ஒரே பிள்ளை என்பதால் தம்பதிகள் இருவருமே குழந்தை மீது பாசத்தையும், அன்பையும் கொட்டினர்.
மேலும் குழந்தை மனவளர்ச்சி குன்றி இருப்பதால் அதற்கு சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. தம்பதி இருவருமே நல்ல வேலையில் இருந்ததால், குழந்தை சிகிச்சைக்கு ஆகும் செலவை கணக்கு பார்க்காமல் சம்பாதித்த அனைத்தையும் சிகிச்சைக்கே செலவு செய்தனர். ஆனால் சில நாட்களில் அவர்களுக்கு வேலை பறிபோனதால், குடும்பத்தில் வறுமை பிடித்து அன்றாட செலவிற்கே கதியின்றி தவித்தது. இதனால் குழந்தை சாதனாவின் சிகிச்சையும் தடையானது.!
மகளை பார்க்க பார்க்க பெற்றோருக்கு பெரும் கவலையாக இருந்த நிலையில், கையில் பணமில்லாமல் செல்வ மகளை கவனிக்க முடியவில்லை என்ற வருத்தமும் இருந்தது. அதனால் மகளை கொன்றுவிட முடிவு செய்த தம்பதிகள், கடந்த 2-ம் தேதி வீட்டுக்கு பக்கத்திலேயே இருந்த ஒரு கோயிலுக்கு மகளை அழைத்து சென்றார்கள். அங்கு பூச்சிக் கொல்லி மருந்தை கொடுத்து குடிக்க வைத்தார்கள். மேலும் மகளின் கழுத்தை பெற்ற தந்தையே நெறிக்க தொடங்கினார்.
இந்நிலையில் கோயிலுக்குள் இருந்த பக்தர்கள், பொதுமக்கள் பார்த்துவிட்டு பதறி ஓடிவந்தார்கள். பின்னர் சாதனாவை பெற்றோரிடமிருந்து மீட்டனர். அதற்குள் சாதனா வாயிலிருந்து நுரை தள்ள தொடங்கியது. உடனடியாக பொதுமக்கள் சாதனாவை அரசு மருத்துவமனைக்கு அனுமதித்தனர். பெற்றோரை கண்டமேனிக்கு திட்டி எச்சரித்தனர். பிறகு அப்பகுதி போலீசாருக்கும் தகவல் அளித்தனர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் தந்தையை கைது செய்தனர். மருத்துவமனையில் உயிருக்கு போராடி வந்த மகளை கவனிக்க தாயை அனுப்பி வைத்தனர். ஆனால் சாதனாவின் நிலை இன்னும் மோசமானது. உடனடியாக மதுரை ராஜாஜி மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தும் சாதனா நேற்று பரிதாபமாக உயிரை விட்டாள்!