ராஜிவ் காந்தி படுகொலையில் நளினி சிக்கியது எப்படி…? வெளிவராத திடுக்கிடச்செய்யும் தகவல்கள்…

ஹி ந்து நாளிதழுக்கு முதலில் போன அந்த பத்து புகைப்படங்களும் எங்களுக்குக் கிடைத்தபிறகு அவற்றை ப்ரிண்ட் போட்டு விசாரணை அதிகாரிகள் அனைவரிடமும் அளித்திருந்தோம்.

எதையும் விடாதீர்கள். யாரையும் விடாதீர்கள். சந்தேகப்படும்படி யாராக இருந்தாலும் விசாரியுங்கள்.  யார், என்ன தகவல் அளித்தாலும் அலட்சியம் செய்யாதீர்கள் என்று சொல்லியிருந்தோம்.

ஸ்ரீபெரும்புதூர் பொதுக்கூட்டத்துக்குச் சென்றிருந்த ஒரு பெண்மணி (இவர் மகளிர் காங்கிரஸ் பிரிவின் உறுப்பினர்) குர்தா பைஜாமா நபருடன் ஹரி பாபுவை அங்கே தாம் பார்த்ததாகச் சொன்னார்.

அவர்களுடன் மேலும் இரு பெண்கள் பேசிக்கொண்டிருந்ததாகச் சொன்ன அவரிடம் நாங்கள் ஹரி பாபு எடுத்த படங்களைக் காட்டியபோது, சரியாக அடையாளம் காட்டினார்.

நளினி. இது யார் புதிய முகம்?

நாங்கள் யோசித்துக்கொண்டிருந்தபோது புலனாய்வில் ஈடுபட்டிருந்த அதிகாரி ஒருவர்,

ஹரி பாபுவின் வீட்டில் கிடைத்த தடயங்களின் அடிப்படையில் பாக்கியநாதனை விசாரிப்பதற்காகச் சென்றார். பிபிஎல் ஆல்ரவுண்டர் அச்சக உரிமையாளர் பாக்கியநாதன். பாக்கியநாதன் இளைஞர் இருபத்தி ஐந்து வயதுக்கு மேல் சொல்ல முடியாத தோற்றம். பி.காம் பட்டதாரி.

அவரது தாயார் பெயர் பத்மா. அவர் மயிலாப்பூரில் உள்ள கல்யாணி நர்சிங் ஹோமில் நர்ஸாகப் பணியாற்றிக்கொண்டிருந்தார். அவருக்கு மகள் ஒருத்தி இருந்தாள்.

அவள் பெயர் கல்யாணி. அவளும் நர்ஸ்தான். சிறிய குடும்பம். தகப்பன் உடனில்லாத குடும்பம். பத்மா, தன் கணவருக்கு இரண்டாம் தாரம் என்பதால் சில குடும்பச் சிக்கல்கள் அவர்களுக்கு இருந்தன.

பொருளாதாரச் சிக்கல் அதில் பிரதானமானது. இந்த விஷயங்களெல்லாம் பாக்கியநாதனிடமிருந்து கிடைத்தாலும் உருப்படியாக ஒரு தடயம் அகப்படவில்லை.

ஹரி பாபுவை அவருக்குத் தெரியும் என்ற ஒரு விஷயம் மட்டுமே எப்படி உதவும்?

அவரை விசாரித்துக்கொண்டிருந்த புலனாய்வு அதிகாரிக்கு மிகத் தற்செயலாகத்தான் ஒருநாள் அலுவலகத்தில் பொறி தட்டியது.

நாங்கள் அப்போது ஹரி பாபு எடுத்த புகைப்படங்களை வைத்துக்கொண்டு விவாதித்துக்கொண்டிருந்தோம்.

இரு பெண்களின் அடையாளம் கண்டு, சுட்டிக்காட்டிய மகளிர் காங்கிரஸ் பெண்மணி பற்றிப் பேச்சுவர, அந்தப் புலனாய்வு அதிகாரி தற்செயலாக படத்தில் இருந்த நளினியைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

‘ஓ, இவரை நான் பாக்கியநாதன் வீட்டில் சில சமயம் பார்த்திருக்கிறேனே?’ தூக்கிவாரிப் போட்டது எங்களுக்கு. வட்டம் சுருங்கத் தொடங்கிவிட்டதா? நளினிக்கும் பாக்கியநாதனுக்கும் என்ன சம்பந்தம்?

அவர் அப்படி ஒரு பெயரைச் சொல்லவேயில்லையே? பாக்கியநாதன் வீட்டு உறுப்பினர்கள் என்று அவரது அம்மாவும் தங்கையும் மட்டும்தானே அறிமுகமானார்கள்?

இதற்கிடையில் இன்னொரு விஷயம் நடந்தது. சம்பவம் நடந்த இரு நாள்கள் கழித்து தஞ்சாவூர் அருகே, தமிழக காவல் துறை அதிகாரிகள் ஒரு செக் போஸ்டில் பரிசோதனைப் பணியில் ஈடுபட்டிருந்தபோது சங்கர் என்கிற கோணேஸ்வரன் என்கிற விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவர் பிடிபட்டிருந்தார்.

அவரிடமிருந்த துண்டுச் சீட்டில் இரண்டு டெலிபோன் நம்பர்கள் இருந்தன.

‘நளினி தாஸ் – 2419493’ என்று ஓர் எண். இன்னொன்று, ‘சிவராசா – 2343402.’ அதன் அடிப்படையில் அந்த இரு எண்களுக்கும் போன் செய்து விசாரித்ததில் முதல் எண், அடையாறில் இருந்த அனபான் சிலிக்கான்ஸ் என்னும் நிறுவனத்தின் டெலிபோன் நம்பர் என்று தெரிந்தது.

நளினி அங்கே பணியாற்றிக்கொண்டிருந்தார். இன்னொரு எண், போரூரில் உள்ள எபினேசர் ஸ்டோர்ஸ் என்னும் மளிகைக் கடையினுடையது.

வேறொரு புலனாய்வுப் பிரிவு அனபான் சிலிக்கான்ஸுக்குச் சென்று நளினியை முன்னதாக விசாரித்திருந்தது. குறிப்பிடத்தக்க தகவல் ஏதும் கிடைக்கவில்லை.

‘எனக்கு தாஸைத் தெரியும், தாஸுக்குத் தெரிந்தவர்கள் யார் வேண்டுமானாலும் இருக்கலாம், எனக்கும் அவர்களுக்கும் என்ன வீட்டில் நளினியைப் பார்த்திருப்பதாக அந்த விசாரணை அதிகாரி சொன்னார்.

அதற்குமேல் காத்திருக்க அவசியம் இல்லை. மீண்டும் பாக்கியநாதன். மீண்டும் விசாரணை. இம்முறை அவர் ஒப்புக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

ஆமாம். நளினி என் மூத்த சகோதரி.

எனக்கு இரண்டு சகோதரிகள் உண்டு.

பாக்கியநாதனைக் கைது செய்வது என்று முடிவு செய்தோம்.

அவரது அச்சகத்துக்குச் சென்று அவரை அழைத்துக்கொண்டு அவரது வீட்டுக்குப் புறப்பட்டோம்.

அது ஒரு வழக்கம். ஒருவரைக் கைது செய்து அழைத்துச் செல்வதற்கு முன்னால் அவரது வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பிடச் சொல்லி கொஞ்சம் சகஜமாகப் பேச்சுக் கொடுப்போம்.

சூழ்நிலை சாதகமாகும்போது விஷயத்தைச் சொல்லி அதிக கலாட்டா இல்லாமல் கைது செய்வது ஒரு நடைமுறை. அந்த மாதிரி பாக்கியநாதனை வீட்டுக்கு அழைத்துச் சென்று சாப்பிடவைத்தோம்.

ஒருவாறு அவர் விஷயத்தை ஊகித்திருக்க வேண்டும். இதற்குமேல் தப்பிக்க முடியாது. எப்படியும் கைது செய்துவிடுவார்கள்.

எனவே அவர் தப்பிக்கலாம் என்று முடிவு செய்தார்.  மிகவும் தாமதமான முடிவு. வீட்டிலிருந்து அவர் தப்பியோட முயற்சி செய்து, தோற்று, அழுதபடி கைதானார்.

கையோடு பாக்கியநாதனின் அம்மா பத்மாவையும் கைது செய்தோம்.

நளினி இல்லை. தப்பித்திருந்தார்!

அவரது அடையாறு அலுவலகத்துக்கு மீண்டும் சென்றபோது, அவர் ராஜினாமா கடிதம் எழுதி வைத்துவிட்டுப் போய்விட்டதாகச் சொன்னார்கள்.

வெறும் சந்தேகத்தின் அடிப்படையில் ஒரு பெண்ணைக் கைது செய்தால் அவரது வாழ்வுக்கு அது பிரச்னை என்று கருதியே நளினி விஷயத்தில் சற்று விட்டுப் பிடிக்கப் பார்த்தோம்.

அதுவே தவறாகிப் போனது. நளினியை மட்டும் முதலிலேயே கைது செய்திருந்தால் வழக்கு இன்னமும் சீக்கிரம் முடிந்திருக்கும்.

இன்னமும் பல தாமதங்களைத் தவிர்த்திருக்க முடியும். ராஜிவ் காந்தி கொலை வழக்கைப் பொருத்தவரை நளினி என்கிற பெண் மிக முக்கியமான ஒரு நபர்.

நளினியைவிட அவரது காதல் மிக மிக முக்கியமானது. அதைப் பிறகு விரிவாகப் பார்க்கலாம்.

இப்போது மீண்டும் பாக்கியநாதன். பாக்கியநாதனுக்கு அவர் படித்து முடித்தபிறகு சரியான வேலை ஏதும் கிடைத்திருக்கவில்லை.

அவரது தாயார் பத்மா வேலை பார்த்த கல்யாணி நர்சிங் ஹோமில் சுபா சுந்தரத்தின் மனைவி பிரசவத்துக்காக வந்திருந்தபோது ஏற்பட்ட பரிச்சயத்தில், பாக்கியநாதனுக்கு சுபா ஸ்டூடியோவில் ஒரு வேலை வாங்கித் தர முடிந்திருந்தது.

1987 நவம்பரில் பாக்கியநாதன் சுபா ஸ்டூடியோவில் வேலைக்குச் சேர்ந்தார். ஸ்டுடியோவுக்கு விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த பலபேர் அவ்வப்போவது வந்து போவது வழக்கம் என்பதால் பாக்கிய நாதனுக்கு அவர்களுடன்  மெல்ல மெல்ல தொடர்புகள் ஏற்பட்டிருக்கின்றன.

முக்கியமாக   முத்துராஜா . இந்த முத்துராஜா  இலங்கை தமிழர் அல்லர். தமிழ்நாட்டுக்காரர்தான்.

ஆனால் தமிழகத்தில் விடுதலைப் புலிகளுக்காக அவரளவுக்கு உழைத்தவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். அத்தனை பெரிய விசுவாசி.

முத்துராஜா மூலமாகவே பாக்கியநாதனுக்கு பேபி சுப்பிரமணியம் அறிமுகமாகியிருக்கிறார். தமிழ்நாட்டில் செயல்பட்டு வந்த விடுதலைப் புலிகள் அமைப்பின் அரசியல் பிரிவில் அவர் மிகவும் முக்கியமான ஒரு புள்ளி. எளிமையானவர்.

தன்மையாகப் பேசுபவர். அறிவாளி. அவரோடு பழகத் தொடங்கி விரைவில் பாக்கியநாதனுக்கு பேபி சுப்பிரமணியத்தை மிகவும் பிடித்துப் போனது.

அவர் எழுதிக்கொடுக்கும் அறிக்கைகள், சிறு வெளியீடுகளை டைப் செய்து கொடுத்து அவ்வப்போது உதவிகள் செய்வது பாக்கியநாதன் வழக்கம்.

பேபி சுப்பிரமணியத்தின் மூலம் அறிவு என்கிற பேரறிவாளன் (இவர் தமிழ்நாட்டுக்காரர். இவரது தந்தையார் ஒரு தீவிர திராவிடர் கழக ஆதரவாளர்.

விடுதலைப் புலிகளுக்கும் இவர்கள் தீவிர ஆதரவாளர்கள்), இரும்பொறை என்கிற இன்னொரு திராவிடர் கழக நபர், தாஸ் என்கிற இலங்கைத் தமிழர் என்று வரிசையாக அவருக்குத் தொடர்புகள் ஏற்பட்டிருந்தன.

பாக்கியநாதனின் குடும்பச் சூழல் அத்தனை சுமுகமாக இல்லை. பிரச்னைக்குரிய தகப்பன். வீட்டில் எப்போதும் சண்டை. ஒவ்வொருவருக்கும் அடுத்தவர் மீது குற்றச்சாட்டுகள் இருந்தன.

பாக்கியநாதன் தனது தாயாருடன் அடிக்கடி சண்டை போடுவது வழக்கம். அந்த நாள்களில் எல்லாம் முத்துராஜாவின் அறையில்தான் தங்குவார்.

அந்தச் சமயங்களில் முத்துராஜா அவருக்கு இலங்கையில் நடக்கிற யுத்தம் குறித்தும் இந்திய அமைதிப்படை குறித்தும் பிரபாகரன் குறித்தும் இயக்கத்தின் பிற வீரர்கள் குறித்தும் ஏராளமான கதைகள் சொல்லுவார். முத்துராஜாவுடனான உரையாடல்கள் மூலமாகத்தான் பாக்கியநாதன் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராகிப் போனார்.

பேபி சுப்பிரமணியத்துடனான பழக்கம் அதை மேலும் உறுதி செய்தது. பேபி சுப்பிரமணியம் அப்போது சென்னையில் ஓர் அச்சகம் நடத்திக்கொண்டிருந்தார்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் பிரசார ஏடுகள் அதில் அச்சாகிக்கொண்டிருந்தன. 1990ம் ஆண்டு ஏப்ரலில் முத்துராஜாவும் பேபியும் இலங்கை செல்வதாக முடிவானபோது பாக்கியநாதனைக் கூப்பிட்டு, ‘அச்சகத்தை நீ எடுத்து நடத்து’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

ஐம்பதாயிரம் ரூபாய்க்கு அச்சகத்தை விற்பதாகப் பத்திரம் எழுதி, ஐயாயிரம் ரூபாய் மட்டுமே பாக்கியநாதனிடம் பெற்றுக்கொண்டு அச்சகத்தைக் கொடுத்தார்கள். மிச்சப்பணத்தை நான் எப்படிக் கட்டுவேன்? பாக்கியநாதனுக்கு அதுதான் கவலை.

அது ஒன்றும் பிரச்னையில்லை. புலிகள் அமைப்பின் பத்திரிகைகளான ‘தமிழீழம்’, ‘உறுமல்’ போன்ற இதழ்கள் அந்த மிச்சப்பணத்தைக் கழித்துக்கொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. பிபிஎல் ஆல்ரவுண்டர்ஸின் உரிமையாளராக பாக்கியநாதன் ஆன விதம் இதுதான்.

இந்த விவரங்கள் பாக்கியநாதனின் தாயார் பத்மாவை விசாரித்தபோதும் கிடைத்து, கிடைத்த விவரங்கள் உண்மையானதுதான் என்பதை உறுதி செய்தன.

என்ன இருந்து என்ன? நளினியைத் தப்பவிட்டுவிட்டோம். அவர் பிடிபடவேண்டும். அது முக்கியம். அதுதான் முக்கியம். அவர் கிடைத்தால், அவருடன் தப்பியிருந்த அந்த தாஸ் என்கிற நபரும் சிக்குவார்.

நளினியும் தாஸும் காதலர்களாமே? நாங்கள் சுறுசுறுப்பாக நளினியைத் தேடத் தொடங்கினோம்.

மே 21ம் தேதி ராஜிவ் காந்தி படுகொலை செய்யப்பட்டதற்குச் சரியாக ஐந்து நாள் கழித்து, மே 25ம் தேதி நளினிக்குப் பிறந்த நாள். 24ம் தேதி மாலை நளினி, தாஸ் என்கிற முருகனுடன் வில்லிவாக்கத்தில் இருந்த தன்னுடைய வீட்டுக்கு அருகே உள்ள ஒரு பிள்ளையார் கோயிலுக்குப் போனார்.

(நளினியின் தாயார் பத்மா, பாக்கியநாதன் ஆகியோர் வசித்து வந்த வீடு ராயப்பேட்டையில் இருந்தது. குடும்பத் தகராறுகள் காரணமாக நளினி வில்லிவாக்கத்தில் தனியே ஒரு வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார்.

சண்டைகள் முடிந்து உறவு சுமுகமான பிறகும் இந்தத் தனி வாடகை வீடு அவர்கள் வசமே இருந்தது. தணு, சுபா இருவரும் சென்னைக்கு வந்தபோது அவர்கள் தங்குவதற்கு வசதியாக இருக்கும் என்று முருகன் சொல்லி, தொடர்ந்து அந்த வீட்டிலேயே நளினி இருந்தார்.

இந்த விவரங்கள் பின்னால் தெரியவந்தன.) இருபத்தி ஆறாம் தேதி காலை, தனது பிறந்தநாளை முன்னிட்டுப் பிள்ளையாருக்கு ஓர் அபிஷேகம் செய்யவேண்டும் என்று அங்கிருந்த குருக்களிடம் சொல்லிவிட்டு, செலவுக்கு நூறு ரூபாய் பணமும் கொடுத்தார்.

‘இருபத்தி ஆறாம் தேதி காலை நான் பூஜைக்கு வந்துவிடுவேன். ஒருவேளை நான் வராவிட்டாலும் பூஜை தடைப்பட வேண்டாம். மனைவியிடமோ கொடுத்துவிடுங்கள்’ என்று சொல்லிவிட்டுப் போனார். சொல்லி வைத்த மாதிரி 25ம் தேதி காலை சிவராசன் வில்லிவாக்கத்துக்கு வந்தார்.

நாம் உடனே திருப்பதி புறப்பட வேண்டும் என்று சொன்னார். திருப்பதிக்கா? என்ன விஷயம்? நளினி கேட்டபோது நேர்த்திக் கடன் என்று சிவராசன் பதில் சொன்னார்.

நளினி அன்றே ராயப்பேட்டை வீட்டுக்குச் சென்று பாக்கியநாதனிடம் திருப்பதி செல்ல ஒரு கார் ஏற்பாடு செய்யும்படி சொன்னார். ‘ஒரு விஷயம். நம்முடன் உன்னுடைய அம்மாவும் வந்தால் மிகவும் வசதியாக இருக்கும்.

ஒரு பாதுகாப்பும்கூட’ என்றார் சிவராசன். எனவே அவர்கள் மொத்தமாகப் புறப்பட்டார்கள். வில்லிவாக்கம் பிள்ளையாருக்கு அபிஷேகம் ஆரம்பித்தபோது நளினி, சுபா, சிவராசன், முருகன், பாக்கியநாதன், பத்மா அனைவரும் திருப்பதியில் தரிசனம் செய்துகொண்டிருந்தார்கள்.

முன்னதாக நளினி அங்கே அங்கப்பிரதட்சிணம் செய்தார். இரண்டு காட்டேஜ் எடுத்துத் தங்கி, தரிசனம் முடித்து, வாடகைக் காரில் அவர்கள் சென்னை திரும்பி அவரவர், அவரவர் இருப்பிடங்களுக்குப் போனார்கள்.

நளினி, அதற்குமேல் வில்லிவாக்கம் வீட்டை வைத்துக்கொண்டிருக்க வேண்டாம்என்று முடிவு செய்து, அன்றே அந்த வீட்டை காலி செய்தார். ஓர் ஆட்டோவில் பொருள்களை ஏற்றிக்கொண்டு ராயப்பேட்டை வீட்டுக்குக் கொண்டு வந்து போட்டார்.

முருகனும் நளினியும் தங்குவதற்கு மடிப்பாக்கத்தில் முருகன் ஒரு வீடு பார்த்திருப்பதாகச் சொல்லியிருந்தார். ‘நீ பாட்டுக்கு ஆபீஸ் போய்க்கொண்டிரு, ஜூன் 7ம் தேதி பெசண்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலுக்கு வா. அங்கே சிவராசன் உன்னைச் சந்திப்பார்.

தொடரும்…
கே. ரகோத்தமன்