ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமைப்பதவியை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஏற்பாராயின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அடிப்படை உறுப்புரிமையிலிருந்து அவர் நீக்கப்படுவார் என்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர அறிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருடாந்த சம்மேளனம் நவம்பர் மாதம் 2 ஆம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ளது. இதன்போது குறித்த கட்சியின் புதிய தலைவராக மஹிந்த பதவியேற்கவுள்ளார்.
இது தொடர்பில் வினவியபோதே சுதந்திரக் கட்சி தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
“சுதந்திரக் கட்சியைக் கைவிட்டுவிட்டு, பொதுஜன பெரமுனவில் மஹிந்த ராஜபக்ஷ இணைவார் என நான் நம்பவில்லை. எனினும், அவருக்குரிய உரிமையில் நான் தலையிட விரும்பவில்லை. சுதந்திரக் கட்சி பல சவால்களை சந்தித்து மீண்டெழுந்த கட்சியாகும். அதைவிட்டுச் செல்பவர்களுக்கு அரசியல் எதிர்காலம் இருக்காது என்பதே என் கருத்தாகும்.
மஹிந்த ராஜபக்ஷ அக்கட்சியின் தலைமைப் பதவியை பொறுப்பேற்றால், சுதந்திரக் கட்சியின் அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கப்படுவார். அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, சுதந்திரக் கட்சியிலிருந்து விலகினாலோ அல்லது விலக்கப்படாலோ எம்.பி. பதவி பறிபோய்விடும் என பொது எதிரணியிலுள்ள சிலர் அஞ்சுகின்றனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.