பொதுவாக ஒரு பழமொழி உண்டு., சொந்த மண்ணை விட்டு சென்ற பின்பு தான்., அதன் அருமை பெருமை அனைத்தும் தெரியும் என்பார்கள். இங்கு தமிழர்களின் தாய் தேசங்களை விட்டுவிட்டு பிழைப்புக்காக சென்று அந்த தேசங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழின் மீதும், தமிழ் மண்ணின் மீதும் பற்று அதிகம் என்று சொன்னால் அது மிகையாகாது.
இங்கு தமிழகத்தில் வாழும் தமிழர்கள் கூட தங்கள் பிள்ளைகளை ஆங்கில மொழி அறிவோடும், மேல்நாட்டு கலாச்சாரத்தின் மோகம் கொண்டு அந்த வழக்கை முறைக்கு வளர்க்கவே ஆசைபடுகிறார்கள். உண்மையில் தமிழ் பற்று என்பது தமிழ் மண்ணில் வாழும் தமிழர்களிடம் குறைந்து வருவதை யாரும் மறுக்க முடியாது. அதே சமயத்தில் தமிழகத்தில் வாழும் தமிழர்களிடம் தமிழ் உணர்வை சிதைக்கும் சில வேலைகளும் நடந்தும் வருகிறது.
அனைத்தையும் கடந்து இன்று உலகம் முழுவதும் உள்ள தமிழ் இளைஞர்கள் மனதில், நம் தமிழை போற்றி புகழ்ந்து, அடுத்து வரும் தலைமுறைக்கு சிறு பிழை இல்லாமல் எடுத்து செல்லவேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. அதற்கு ஏற்றார் போல் இணையதளங்களில் தமிழை முதல் மொழியாக நிலைநிறுத்தி வருகின்றனர். ஏன் இணையதளங்களில் தமிழ் வெற்றி கொடி ஏற்றியுள்ளது என்றே சொல்ல வேண்டும்.
இந்நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கைகளை அமைத்து உள்ளனர். அமெரிக்க வாழ் தமிழர்கள், தமிழ் கலாச்சாரம், தமிழ் பண்பாடு மறவாமல் தங்கள் பிள்ளைகளை வளர்த்து வருகின்றனர். அமெரிக்க நாட்டில் கடந்த சூன் மாதம் நடைபெற்ற தமிழ்பேரவை 2018 ஆம் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சுமார் 1200 க்கும் மேற்பட்ட தமிழர்கள் ஒருங்கிணைந்து அனைவரும் தாய்மொழி தமிழில் கையொப்பமிட்டு கின்னஸ் சாதனையை நிகழ்த்தி உள்ளனர்.
இந்த நிகழ்ச்சியில், தமிழ் திரைத்துறை நடிகர் கார்த்தி சிவகுமார், நடிகர் ஆரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை ஹூஸ்டன் தமிழ் இருக்கை குழு, தமிழ்பேரவை (பெட்னா), மெட்ரோபிளக்ஸ் தமிழ்சங்கம், பாரதி கலை மன்றம் மற்றும் டிரடிஷனல் இந்தியா இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.