முகத்தை மூடிக் கொண்டு வாள் முனையில் பயங்கரக் கொள்ளை….நள்ளிரவில் யாழ் தென்மராட்சியில் பயங்கரம்….!!

யாழ்ப்பாணம், மீசாலை புத்தூர்ச்சந்தி கமநலசேவைகள் திணைக்களத்திற்கு பின்புறமாக உள்ள ஆசிரியர் ஒருவரின் வீட்டிற்குள் வாள்களுடன் நுழைந்த முகமூடிக் கொள்ளையர்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

இன்று அதிகாலை 12.00 மணியளவில் வாள்களுடன் முகத்தை துணியினால் முற்றாக மூடியவாறு சுமார் பத்துக்கும் அதிகமானவர் மதில் பாய்ந்து வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். வீட்டின் யன்னல் ஊடாக வாள்களை காட்டி கதவைத் திறக்குமாறு அச்சுறுத்தியுள்ளனர்.

ஆறு பேர் வீட்டிற்குள் நுழைந்து வாள்களை காட்டி அச்சுறுத்தி தாலிக்கொடி உட்பட சுமார் 18 பவுண் நகைகள், 4000 ரூபா ரொக்கப்பணம் என்பவற்றையும் கொள்ளையிட்டு சென்றுள்ளனர்.

இதன்போது வீட்டிலிருந்தவர்கள் கூக்குரலிட கதவினை உடைத்துக்கொண்டு குறித்த கும்பல் உள்நுழைந்துள்ளது. சுமார் ஒரு மணி நேரம் வரை வீட்டில் நின்ற கொள்ளையர்கள் கூக்குரல் கேட்டு வந்த அயலவர்களையும் அச்சுறுத்தியுள்ளனர்.

இக்கொள்ளை தொடர்பாக கொடிகாமம் பொலிஸாருக்கு அறிவித்ததை தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்குப் பின் சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.