திருப்புவனம் கண்மாயில், சங்க கால உறை கிணறைக் கண்டு பிடித்த மூன்று சிறுவர்கள்….!
சிவகங்கை மாவட்டம் கீழடியில், தொல்லியல் துறையினரின் நான்காம் கட்ட பணிகள் நிறைவு பெற்று விட்டது. தற்போது, அங்கு தோண்டப்பட்ட குழிகளை மூடும் பணிகள் மேற் கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில், கீழடிக்கு 3 கி.மீ. தொலைவில் உள்ள, பசியாபுரம் கிராம கண்மாயில், சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்தக் கண்மாயில், வட்ட வடிவமாக, ஏதோ தென்படவே, ஆர்வ மிகுதியில், மூன்று சிறுவர்கள், அங்குள்ள மண்ணைப் பறித்துப் பார்த்துள்ளனர்.
அது ஏதோ, பழங்கால கிணறு போலத் தோற்றம் அளிக்கவே, அவர்கள் உடனே, கீழடிக்குச் சென்று, அங்கிருந்த தொல்லியல் துறை அதிகாரிகளிடம், அவர்கள் கண்டு பிடித்த கிணற்றைப் பற்றிக் கூறி உள்ளனர்.
உடனே, தமிழக தொல்லியல் துறை இணை இயக்குநர் சிவானந்தம் தலைமையிலான அதிகாரிகள், சிறுவர்கள் சொன்ன பசியாபுரம் கண்மாயில், ஆய்வு மேற் கொண்டனர்.
கீழடியில் கூட, சாதாரண உறை கிணறு தான் கண்டு பிடிக்கப் பட்டது. ஆனால், அந்த சிறுவர்கள் கண்டு பிடித்த உறை கிணறு, அழகிய வேலைப்பாடுகள் கொண்டதாக இருந்தது.
மேலும், தண்ணீர் எடுக்கப் பயன்படுத்திய, வேலைப்பாடுடன் கூடிய பானைகளும் கிடைத்துள்ளன. இது அதிகாரிகளை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்தக் கிணற்றைக் கண்டு பிடித்த ஆதீஸ்வரன், சாந்தமுருகன், ஈஸ்வரபாண்டி ஆகிய மூவரையும், அதிகாரிகளும், மக்களும் வெகுவாகப் பாராட்டினர்.