மருத்துவ கல்லூரி மாணவர் தற்கொலை!. போலீசார் தீவிர விசாரணை!

போரூரை அடுத்த அய்யப்பன்தாங்கலை சேர்ந்தவர் நிகேஷ். இவர் ஒரு தனியார் மருத்துவக்கல்லூரியில் 2-ம் ஆண்டு மருத்துவ படிப்பு படித்து வந்தார்.

நிகேஷ் அப்பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தனது பாட்டி வாசுகியுடன் தங்கி வசித்துவந்துள்ளார். இவரது தந்தையும், தாயும் அமெரிக்காவில் வசித்து வருகிறார்கள். நேற்று முன்தினம் வழக்கம்போல் கல்லூரி முடிந்து வீட்டிற்கு வந்த நிகேஷ் மிகுந்த மன விரக்தியில் இருந்துள்ளார்.

இந்த நிலையில் நிகேஷ் நேற்று முன்தினம் இரவு தான் வசித்து வந்த குடியிருப்பின் 7-வது மாடியில் இருந்து திடீரென கீழே குதித்தார். இதில் தலையில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதனையடுத்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், நிகேஷின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், பெற்றோர் அமெரிக்காவில் வசித்து வந்ததால் நிகேஷும் அமெரிக்காவில் தான் பள்ளி படிப்பை தொடர்ந்து வந்துள்ளார். இதனையடுத்து மருத்துவராக ஆசைப்பட்ட அவர் மருத்துவ படிப்பிற்காக சென்னைக்கு வந்து பாட்டியுடன் தங்கி உள்ளார்.

இவர் தற்கொலைக்கான காரணத்தை பல கோணத்தில் விசாரித்து வருகின்றனர் காவல்துறையினர். மேலும் நிகேஷின் பெற்றோர்களுக்கு இச்சம்பவம் குறித்து தகவல் கொடுக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.