மனைவியுடன் தகாத உறவு வைத்திருப்பதை தட்டிக் கேட்ட கணவரை அடித்து அவரது வீட்டிலேயே வைத்து சிறை வைத்ததாக காவல் உதவி ஆய்வாளர் மீது குற்றசாட்டு. பாதிக்கப்பட்டவர் சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்து உள்ளனர்.
காவல் உதவி ஆய்வாளரிடம் இருந்து மனைவியை மீட்டு தரவும், தன்னை தாக்கியது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை. சேலம் அன்னதானப்பட்டி பகுதியை சேர்ந்தவர் மலைவாசன். வெள்ளி பட்டறையில் கூலி வேலை செய்து வரும் இவருக்கு மணிமேகலை என்ற மனைவியும், இரண்டு மகளும் உள்ளனர். இந்த நிலையில் கணவர் – மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து தனது கணவர் குறித்து அன்னதானப்பட்டி காவல் நிலையத்தில் மணிமேகலை அவ்வப்போது புகார் மனு அளித்ததாகவும் கூறப்படுகிறது.
இந்த புகார்கள் தொடர்பாக காவல்நிலையத்திற்கு மணிமேகலை வந்த போது, அங்கு சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணிபுரிந்து வரும் கலைசெல்வன் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த கணவர் மலைவாசன், இருவரையும் கண்டித்துள்ளார். இதனையடுத்து இருவரும் சேர்ந்து அவரை வீட்டை விட்டு வெளியேற்றியதாகவும், கடந்த சில மாதங்களாக மலைவாசன் தனியாக வசித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில், மணிமேகலை வீட்டிற்கு அடிக்கடி வந்த சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கலை செல்வன், மணிமேகலையின் மகளை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து தன்னை தாக்கியதாக, அவர் தனது தந்தையான மலைவாசனிடம் தெரிவித்து உள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர், இது குறித்து கலைசெல்வனிடமும், மணிமேகலையிடம் கேட்ட போது, இருவரும் கடுமையான வார்த்தைகளால் திட்டி உள்ளனர். மேலும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் கலைசெல்வன், மலைவாசனை கடுமையாக தாக்கியதோடு, வீட்டில் வைத்து சிறைவைத்துள்ளார். இதனையடுத்து ஜன்னல் வழியாக அவர் உதவி கோரியதை தொடர்ந்து அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதையடுத்து சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் புகார் மனு அளித்தார் அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கபட்டு வருகிறது. இருப்பினும், மலைவாசனை தாக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது வழக்கு பதிவு செய்யாமல் காவல்துறையினர் அலட்சியமாக இருந்து வருகின்றனர். கணவர் –மனைவியிடையே ஏற்பட்ட தகராறை பயன்படுத்தி, புகார் கொடுக்க வந்த பெண்ணிடம் ஆசை வார்த்தை கூறி தகாத உறவு வைத்ததோடு, அவரது கணவரையும் தாக்கிய சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து உள்ளது.