“நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டதாக”, தென்னிலங்கையைத் தளமாக கொண்டு இயங்கும் ஆங்கில ஊடகமொன்று, தனது முகப்பு செய்தியில் தலைப்பிட்டிருந்தது.
உண்மைக்கு புறம்பான இச்செய்தியை சிங்கள தேசத்தின் நலன்சார் ஆங்கில ஊடகமொன்று தனது முகப்புச் செய்தியில் இடவேண்டிய தேவை அதற்கு ஏன் வந்தது ? என்று யோசிக்க வைத்துள்ளது.
புலம்பெயர் தமிழர்களை நோக்கி ஐரோப்பாவுக்கு வருகை தந்துள்ள வட மாகாண ஆளுனர் மற்றும் பிரித்தானியாவுக்கு வருகை தந்துள்ள சிறிலங்காவின் பிரதமர் ரணிலுக்கு எதிராக, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் மேற்கொண்டிருந்த தொடர் எதிர்ப்பு போராட்டங்கள் நடைபெற்றிருந்த சமவேளை, வி.உருத்திரகுமாரனுக்கு எதிரான போலிச்செய்தி பரப்பபட்டுள்ளது.
சமீபத்தில் நியூ யோர்கில் உள்ள ஐ.நா பொதுச்சபையில் உரையாற்ற வந்திருந்த சிறிலங்காவின் அதிபருக்கு எதிராக ஐ.நாவின் வாயிலில் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், போர்குற்றச்சாட்டுகள் சிறிலங்காவின் அதபரிடம் வினவுமாறு, ஐ.நா உறுப்பு நாடுகளை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியிருந்தது.
குறிப்பாக அதிபர் மைத்திரியுடன் நியூயோர்க்கு வந்திரந்த சிறிலங்காவின் அமைச்சர்களின் ஒருவரான சம்பிக்க ரணவக்க, கடந்த காலங்களில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மீது தனது கடுமையான கோபத்தை வெளிப்படுத்தி வந்திருப்பவர்.
தொடர்சியாக சிறிலங்காவின் அரசியல் தலைவர்களின் புலம்பெயர் தேசங்கள் நோக்கிய பயணங்கள் கடும் எதிர்ப்புக்களை சந்தித்து வரும் நிலையிலேயே பிரதமர் வி.உருத்திரகுமாரன் மீதான தனது கோபத்தை போலிச் செய்திகள் ஊடாக பரப்பியுள்ளது.
இதனைத்தான் கொழும்பு ஆங்கில ஊடகத்தின் முகப்புச் செய்தியும் வெளிக்காட்டியுள்ளது.வி.உருத்திரகுமாரன் இவ்வாறு இலக்கு வைக்கப்படுவது இது முதற்தடவை அல்ல. கடந்த காலங்களில் இவ்வாறு போலிச்செய்திகளும், விசமப்பிரச்சாரங்களும் சிங்கள ஊடகங்களாலும், சிங்கள கைக்கூலிகளாலும் பரப்பபட்டுள்ளன.
ஆனால் இவற்றுக்கெல்லாம் பதில் சொல்லிக் கொண்டிருக்காமல், நீதிக்கும் உரிமைக்குமான செயற்பாட்டின் ஊடாகவே மக்களுக்கான செய்தியை அவர் வெளிப்படுத்தி வந்துள்ளார்.
குறிப்பாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், வி.உருத்திரகுமாரன் ஆகியோருக்கு எதிரான விசமப்பிரச்சாரங்களுக்கு பின்னால் பல்வேறு அரசியல் காரணிகள் காணப்படுவதாக அரசியல் அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
சிறிலங்காவின் ஆட்சிக்கதிரையில் இருக்கும் தற்போதைய அரசாங்கத்தினை தாங்கி நிற்கும் ஒரு சக்தியாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு மாறியுள்ள நிலையில், தாயக மக்களின் நீதிக்கும் உரிமைக்குமான குரலாக வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அவர்களே காணப்படுகின்றார்.
சிறிலங்காவின் ஆட்சியாளர்களை நோக்கி அவர் முன்வைக்கின்ற எதிர்கருத்துக்கள், கேள்விகள் ஆட்சியாளர்களை கோபத்துக்கு உள்ளாக்கி வருகின்றது.
அபிவிரித்தி, நல்லிணக்கம் என்ற மாயைக்குள் தமிழ் மக்களின் போராட்டத்தை மெதுமெதுவாக நீர்த்துப் போகச் செய்துவிடலாம் என்ற சிறிலங்காவின் விருப்புக்கு எதிராகவே சீ.வி.விக்னேஸ்வரனின் குரல் இருந்து வருகின்றது.
அதாவது தமிழர் போராட்டத்தை பலவீனப்படுத்த நினைக்கும் தரப்புக்கு கடும் சீற்றத்தை ஏற்படுத்தி வரும் நிலையிலேயே, அவருக்கு எதிரான விசமப்பிரச்சாரங்களை சிறிலங்காவின் ஆட்சியாளர்களும், சிறிலங்காவின் கைக்கூலிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.
மறுபுறம் இலங்கைத்தீவுக்கு வெளியே தமிழீழம் என்ற நிலைப்பாட்டில் உறுதியாகவும், நீதிக்கும் உரிமைக்குமான போராட்ட களத்தில் செயல்முனைப்பாகவும் உள்ள மற்றொருவராக வி.உருத்திரகுமாரன் காணப்படுகின்றார்.
குறிப்பாக இவர் பிரதமர் பொறுப்பினை வக்கின்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கம், முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை 10 ஆண்டுகளை எட்ட உள்ள நிலையிலும், ஒயாது போராடி வருகின்றது.
இது சிங்கள ஆட்சியாளர்களுக்கு கசப்பான ஒன்றாகவுள்ள நிலையில், வி.உருத்திரகுமாரனுக்கு எதிரான விசமத்தனமாக போலிச்பிரச்சாரங்கள் ஊடாக நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தை பலவீனப்படுத்த முனைகின்றது.
அதாவது சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வி.உருத்திரகுமாரன் போன்ற ஈழத் தமிழ் தலைமைகளை பலவீனப்படுத்துவதன் ஊடாக, ஈழத்தமிழர்களின் போராட்டத்தை நீர்த்துப் போகச் செய்யலாம் என சிங்களம் நினைக்கின்றது.
இத்தகைய சூழலில்தான் பிரித்தானியாவில் வட மாகாண ஆளுனர் மற்றும் ரணிலுக்கு எதிரான எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமாகியிருந்த வேளை, கொழும்பு ஊடகம் வி.உருத்திகுமாரனுக்கு எதிரான தனது விசத்தை கக்கியுள்ளது.
கடந்த காலங்களில் போராட்ட களத்தில் பல தளபதிகள் சிறிலங்கா இராணுவத்தினரால் இலக்கு வைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் அது துப்பாக்கி வோட்டுகளால் எனில் தற்போது வி.உருத்திரகுமாரன் இலக்கு வைக்கப்படுவது போலிக்கருத்துக்களால்.
இவ்வாறான சிறிலங்காவின் போலிச்செய்திகளுக்கும் விசமத்தனங்களுக்கும் பதில் சொல்லிக் கொண்டிருப்பதானது, சிறிலங்காவின் நிகழ்ச்சி நிரலுக்குள் விழுத்துவதற்கான ஒரு யுக்தி. மாறாக நீதிக்கும் உரிமைக்குமான ஈழத்தமிழ் மக்களின் நிகழ்ச்சி நிரலை நோக்கி செயற்பாட்டுத்தளத்தில் இருப்பதே சிங்கள தேசத்துக்கான தக்க பதிலாக இருக்கும்.