சவுதிஅரேபிய பத்திரிகையாளர் ஜமால்கசோகியை தூதரகத்திற்குள் வைத்து கொலை செய்தவர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் காணப்படும் சிசிடிவி வீடியோக்களை துருக்கி ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
சவுதி அரேபிய ஆட்சியாளர்களை கடுமையாக விமர்சித்து வந்த பத்திரிகையாளர் ஜமால் கசோகி துருக்கிக்கான சவுதி அரேபிய தூதரகத்திற்குள் வைத்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்ற சந்தேகம் நிலவுகின்ற ஒரு சூழ்நிலையிலேயே துருக்கி ஊடகங்கள் இந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளன.
சவுதிஅரேபியாவின் புலனாய்வு துறையை சேர்ந்தவர்கள் என கருதப்படுபவர்கள் துருக்கிக்குள் விமானநிலையம் ஊடாக நுழைவதையும் பின்னர் அவர்கள் விமானநிலையம் ஊடாக மீண்டும் சவுதி அரேபியாவிற்கு செல்வதையும் காண்பிக்கும் வீடியோக்களை ஊடகங்களை வெளியிட்டுள்ளன.
பத்திரிகையாளரின் உடலை தூதரகத்திலிருந்து வெளியே கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என கருதப்படும் கறுப்பு நிற வாகனம் உட்பட பல வாகனங்கள் தூதரகத்தை நோக்கி செல்வதை காண்பிக்கும் வீடியோவை துருக்கியின் டீஆர்டி வெளியிட்டுள்ளது.
சவுதிஅரேபியாவை சேர்ந்தவர்கள் இஸ்தான்புல் விமானநிலையம் ஊடாக துருக்கிக்குள் நுழைவதையும் ஹோட்டல் ஒன்றிற்கு செல்வதையும் பின்னர் அவர்கள் விமானநிலையத்தின் ஊடாக தங்கள் நாட்டிற்கு செல்வதையும் வீடியோக்கள் காண்பித்துள்ளன.
ஒக்டோபர் இரண்டாம் திகதி சவுதி அரேபியாவிலிருந்து வந்த விமானங்கள் குறித்து துருக்கியின் அதிகாரிகள் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.குறிப்பிட்ட விமானத்தை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
இதேவேளை கொல்லப்பட்டதாக கருதப்படும் பத்திரிகையாளர் துருக்கியிலுள்ள சவுதிஅரேபிய தூதரகத்திற்கு செல்வதை காண்பிக்கும் வீடியோக்களும் வெளியாகியுள்ளன.
சவுதி அரேபியாவின் பிரபல பத்திரிகையாளர் ஓருவர் துருக்கியில் உள்ள சவுதி அரேபிய தூதரகத்திற்குள் வைத்து படுகொலை செய்யப்பட்டுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த கொலை ஏற்கனவே திட்டமிடப்பட்டது குறிப்பிட்ட பத்திரிகையாளர் தூதரகத்திற்கு செல்லவுள்ளார் என்பதை அறிந்த சவுதிஅரேபிய அதிகாரிகள் துருக்கிவந்துள்ளனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.