இளைஞர் ஒருவர் தனது இருசக்கரவாகனத்தை நீதிமன்ற வளாகத்தில் தீயிட்டு கொளுத்திய சம்பவம் மும்பையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிராவின் சவான்வாடியைச் சேர்ந்த இளைஞ அன்வர் ராஜ் குரு. அவர் தனக்கு கடந்த 2009ம் ஆண்டு ஆசை ஆசையாக் ஒரு பைக் வாங்கினார். நீண்டநாள் கனவு நிறைவேறிய மகிழ்ச்சியில், வாகன எண்ணை பதிவு செய்ததற்காக ஆர்டிஓ அலுவலகத்துக் சென்றார். ஆனால் அவர் கொடுத்த ஆவணங்கள் போலி எனக்கூறி அவர் மீதும், அவரது ஏஜெண்ட் மீதும் புகார் அளிக்கப்பட்டது. அவர்கள் இருவரையும் காவல்துறை கைது செய்தது.
தான் கொடுத்தது எதுவும் போலி ஆவணங்கள் இல்லை என்று இளைஞர் கதறினார். ஆனால் கேட்பார் யாருமில்லை. சிறையில் அடைக்கப்பட்டார்.
இது குறித்த வழக்கு விசாரணை நீண்டகாலமாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த மே மாதம் தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம்சாட்டப்பட்ட இருவரும் நிரபராதிகள் என்று விடுவிக்கப்பட்டனர்.
தவறான குற்றச்சாட்டினால் சிறையில் அடைக்கப்பட்டது, நீதி கிடைக்க பல வருடங்கள் ஆனது ஆகியவற்றால் இளைஞர் அன்வர் கடும் விரக்தி அடைந்தார். அது அவரது மனதை உறுத்தியபடியே இருந்தது.
இந்த நிலையில் ரூ.22 ஆயிரம் சாலை வரி செலுத்தி தனது பைக்கை ஷோ ரூமில் இருந்து வெளியே எடுத்த அன்வர், ஆட்டோ மூலம் நீதிமன்ற வளாகத்துக்கு எடுத்து வந்தார். அங்கு பைக்கின் மீது பெட்ரோலை ஊற்றி எரித்தார்.
மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் இப்படி பைக் எரிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பைக் எரிக்கப்பட்ட காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகியது.
இந்த சம்பம் குறித்து விசாரித்த காவலர்கள், அன்வரை கைது செய்தனர்.
“பைக் விவகாரத்தில் என்மீது ஆர்.டி.ஓ. அலவலகத்தில் தவறாக புகார் அளிக்கப்பட்டது. பிறகு காவல்துறையும் கடுமையாக அலைக்கழித்தது. நீதிமன்றம் நீண்டகாலம் கழித்தே எனக்கு நீதி வழங்கியது. இதனால் சிறையில் அடைக்கப்பட்டேன். பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டேன். என் வாழ்க்கையே திசைமாறிப்போனது. அந்த விரக்தியில்தான் நான் மிகவும் ஆசைப்பட்ட பைக்கை நீதிமன்ற வளாகத்தில் எரித்தேன்” என்று அன்வர் தெரிவித்தார்.
நீதிமன்றம் உள்ளிட்ட அரசு நிர்வாகங்களால் அலைக்கழிக்கப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு மீண்ட இளைஞர் பைக்கை எரித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.