ஜெயலலிதா மரணம் குறித்து ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. நேற்று ஆணையத்தில், 22.9.2016 அன்று இரவு ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது சிகிச்சை அளித்த மருத்துவர்களில் ஒருவரான இருதய நோய் தடுப்பு சிறப்பு மருத்துவர் சத்தியமூர்த்தி ஆஜராகி சாட்சி அளித்தார்.
இந்த நிலையில் ஆறுமுகசாமி ஆணையம் எம்ஜிஆர்-ன் சிகிச்சை ஆவணங்களை வழங்க அப்போலோவுக்கு உத்தரவிட்டிருக்கிறது. எம்ஜிஆர்-ஐ வெளிநாடு அழைத்துச் செல்ல எதனடிப்படையில் முடிவெடுக்கப்பட்டது எனவும் ஆணையம் கேள்வி எழுப்பியிருக்கிறது.
34 ஆண்டுகளுக்கு பிறகு எம்ஜிஆர்-ன் சிகிச்சை ஆவணங்களை வழங்க கேட்டுக்கொள்ளப்பட்டது. 23 ந்தேதிக்குள் எம்.ஜிஆர் சிகிச்சை ஆவணங்களை ஒப்படைக்க கேட்டுக்கொள்ளப்பட்டது. எம்.ஜி.ஆர் 1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 5-ந்தேதி இரவு அமெரிக்கா அழைத்து செல்லப்பட்டார். விமானம் இரவு 10.45 மணிக்கு அமெரிக்காவுக்குப் புறப்பட்டது.
எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாள், அமைச்சர் ஹண்டே, முதலமைச்சரின் தனிச்செயலாளர் பரமசிவம் மற்றும் டாக்டர்கள், நர்சுகள், உதவியாளர்கள் உள்பட மொத்தம் 21 பேர் அந்த விமானத்தில் புறப்பட்டனர். வழியில் விமானம் பெட்ரோல் நிரப்புவதற்காக பம்பாய், லண்டன் ஆகிய இடங்களில் தரை இறக்கப்பட்டது. பின்னர் இந்திய நேரப்படி 6-ந்தேதி இரவு 10.22 மணிக்கு விமானம் அமெரிக்காவில் இருக்கும் நியூயார்க் நகரத்தை அடைந்தது. புரூக்ளின் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சையின் மூலம் எம்.ஜி.ஆரின் உடல் நிலையில் சிறப்பான முன்னேற்றம் காணப்பட்டது.