‘பப்ஜி’ கேம் விளையாட்டிற்கு அடிமையான வாலிபர் தனது குடும்பத்தினரையே கொலை செய்த கொடூரம்..

பப்ஜி எனும் செல்போன் கேம் விளையாட்டிற்கு அடிமையான வாலிபர் பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஐரிஸ் நாட்டின் ‘பிராடன் கிரீனி’ என்பவரால் உருவாக்கப்பட்டது ‘பப்ஜி’ ஸ்மார்ட் போன் கேம். (Player Unknown’s Battle grounds (PUBG)) என்பதே இதன் சுருக்கம். இந்த கேம் இளைஞர்கள், இளம் பெண்களின் மத்தியில் வைரலாக பரவி வருகிறது. இது அவர்களின் நேரத்தை வீணடித்து அந்த விளையாட்டிற்கு அடிமைகளாகவும் உருவாக்குகிறது.


இந்த கேம்மில் சிறுசிறு குட்டித்தீவுகள் அடங்கிய உள்ள ஒரு பெரிய தீவில் 100 பேர் களம் கண்டு, போர்களத்தில் போராடி யார் வெற்றி பெருகிறார்களோ அவரே வெற்றி பெருவார் என்பதே போட்டியின் விதி. இதில், ஒருவர், இருவர், நால்வர், ஆறுபேர் என, எண்ணிக்கையில் அணி அணியாக சேர்ந்து விளையாடலாம். இதுவரை வெளிவந்த மொபைல் ‘கேம்’களிலேயே உயர் தொழில்நுட்பம், கிராபிக்ஸ் காட்சிகள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டதால் இளைஞர்கள், கல்லுாரி பெண்கள் மத்தியில் ‘பப்ஜி’ விளையாட்டு மோகம் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், டெல்லியை சேர்ந்த சுராஜ் அலியாஸ் சர்னம் வெர்மா எனும் வாலிபர் பப்ஜி கேம் விளையாட கூடாது எனக்கூறியதால் பெற்றோரையே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ’ பெற்றோரை கொன்ற சுராஜ் அலியாஸ், பப்ஜி கேம் விளையாடி அதற்கு அடிமையானதால் பள்ளிக்கு செல்லாமல் நண்பர்களுடன் சேர்ந்து மெஹ்ரவுலி எனும் இடத்தில் ரூம் வாடகைக்கு எடுத்து அங்கு கேம் விளையாடி வந்துள்ளார்.

இதனால் பள்ளி தேர்வுகளில் தோல்வியடைந்ததால் 12ம் வகுப்பினை கைவிட்டு உள்ளான். ஊர் சுற்றி வந்த அவனை பெற்றோர் கண்டித்துள்ளனர். பின்னர் தனியார் கல்வி நிறுவனம் ஒன்றில் சிவில் பொறியியலுக்கான டிப்ளமோ படிப்பில் அவனை மிதிலேஷ் சேர்த்து விட்டுள்ளார்

ஆனாலும், வீட்டுக்கு தெரியாமல் சுராஜ் செய்து வரும் சில்மிஷங்களை மோப்பம் பிடித்த அவரது சகோதரி அதை பெற்றோரிடம் போட்டுக்கொடுத்துள்ளார். இதனால் சுராஜ் செல்போன் பயன்படுத்த பெற்றோர் தடை விதித்துள்ளனர். இதனால் கேம் விளையாட முடியாத விரக்தியில் இருந்த சுராஜ் தனது குடும்பத்தினரை கொலை செய்யும் கொடூர முடிவுக்கு வந்துள்ளான்.

கடந்த செவ்வாய் கிழமை நண்பர்களுடன் மெஹ்ராலி நகருக்கு சென்று ஆயுதங்களை வாங்கி வந்துள்ளான்.

அதன்பின் இரவில் பெற்றோருடன் சேர்ந்து புகைப்பட ஆல்பங்களை பார்த்துள்ளான். வழக்கம்போல் நடந்து கொண்டான். அதன்பின்னர் அதிகாலை 3 மணியளவில் எழுந்த அவன் தந்தையை கத்தியால் பலமுறை குத்தி உள்ளான்.

சத்தம் கேட்டு அதே அறையில் தூங்கி கொண்டிருந்த அவன் தாய் எழுந்து அலறினார். அவரை ஒரு முறை குத்தியுள்ளான். பின்னர் சகோதரி அறைக்கு சென்று அவரை கழுத்தில் குத்தியுள்ளான்.

இந்த சம்பவத்தில் 3 பேரும் உயிரிழந்தனர். அதன்பின்பு கைகளை கழுவி தடயங்களை அழித்து விட்டு வீட்டில் இருந்த பொருட்களை உடைத்து போட்டு விட்டு அருகில் வசிப்போரிடம் வீட்டுக்குள் கொள்ளைக்காரர்கள் வந்துள்ளனர் என கூறியுள்ளான்.

இதனை அடுத்து போலீசாரிடமும், கொள்ளைக்காரன் வீட்டில் கொள்ளையடிக்க வந்துள்ளான். ஆனால் எந்த பொருட்களும் கிடைக்கவில்லை என சுராஜ் கூறியுள்ளான். ஆனால் சுராஜை கொள்ளைக்காரன் விட்டு சென்றது ஏன் என்ற சந்தேகத்தில் போலீசார் விசாரணை நடத்தினர். தடய அறிவியல் குழு சுராஜ் தடயங்களை அழித்த விவரத்தினை கண்டறிந்தனர். அதன்பின் போலீசார் சுராஜிடம் நடத்திய விசாரணையில் உண்மை தெரிய வந்தது.

கைது செய்யப்பட்ட சுராஜ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான், விசாரணையின் போது தண்டைனையில் இருந்து தன்னை காப்பாற்றுங்கள் என்று மட்டுமே அவன் கூறிவருவதாக போலீசார் கூறினர். குடும்பத்தினர் இறுதி சடங்குகளில் சுராஜை அனுமதிக்க கூடாது என நீதிமன்றத்தில் அவனது உறவினர்கள் கூறியதை தொடர்ந்து அனைத்து சடங்குகளையும் உறவினர்களே செய்தனர்.

செல்போன் கேம் விளையாட்டிற்கு அடிமையான வாலிபர் பெற்றோர் மற்றும் சகோதரியை கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.