கங்கை நதியை சுத்தம் செய்ய வேண்டும் என்று இத்தனை வருடமாக தொடர் உண்ணாவிரதம் இருந்த பிரபல சமூகவியலாளர் பேராசிரியர் ஜிடிஅகர்வால் ஹரித்வாரில் மரணம் அடைந்தார்.
உண்ணாவிரதம் காரணமாக உடல்நலம் குன்றிய அவர் இன்று அதிகாலை 1.30 மணிக்கு ஹரித்வார் கங்கை கரையில் மரணம் அடைந்தார். இவர் உடல் எய்ம்ஸ் மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. சமூகவியலாளர் பேராசிரியர் ஜிடி.அகர்வால் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னலாஜி கான்பூரில் பேராசிரியராக இருந்தவர். மேலும் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் இவர் பணியாற்றி இருக்கிறார். ஐஐடியிலும், கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும் இவர் படித்துள்ளார்.
நீர் மாசுபாடு தொடர்பாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த இவர், உத்தர பிரதேசத்தில் பிறந்தவர் என்பதால் கங்கை நதி மாசுபடுவதற்கு எதிராக போராடி வந்தார். கங்கையில் எவ்வளவு அசுத்தம் கலக்கிறது என்று துல்லியமாக கணக்கிட்டு, நதியின் எதிர்காலத்தை கணித்து பல ஆய்வு அறிக்கைகளை வெளியிட்டவர் ஜிடி.அகர்வால். ஆனால் அரசு இவரின் அறிக்கைகளை கண்டுகொள்ளவில்லை. இதன் காரணமாக இவர் கடந்த ஜூன் 22ம் தேதி கங்கையை சுத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்து உண்ணாவிரதம் இருந்தார். கங்கை நதியில் உள்ள நகரங்களுக்கு எல்லாம் சென்று உண்ணாவிரதம் இருந்தார்.
111 நாட்கள் உண்ணாவிரதம் இருந்த காரணத்தால் இவரது உடல்நிலை குன்றிய நிலையில் இவர் இன்று அதிகாலை 1.30 மணிக்கு மரணம் அடைந்தார். இதன் காரணமாக ஹரித்வாரிலும், அவர் பிறந்த ஊரிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கங்கை நதியை சுத்தம் செய்வதாக வாக்குறுதி அளித்து ஆட்சிக்கு வந்த பிரதமர் மோடி, இவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.