ரஃபேல் விவகாரத்தை மூடிமறைக்கும் பணி தொடங்கிவிட்டது: ராகுல் காந்தி

ரஃபேல் விமான ஒப்பந்தம் தொடர்பாக நீதிமன்றம் கேட்டுள்ள விளக்கத்துக்காகவே, நிர்மலா சீதாராமன் பிரான்ஸ் செல்கிறார்’ என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம்…!

கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி பிரான்சிடம் இருந்து, ரபேல் போர் விமானங்களை வாங்க, ரூ. 58 ஆயிரம் கோடி மதிப்பில் ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு மத்திய அரசு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்நிலையில், இந்த கொள்முதல் ஒப்பந்தத்தில் பெரிய அளவில் முறைகேடுகள் நடந்திருப்பதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியினர் குற்றம் கூறவும், இந்த குற்றத்திற்கு பாஜக கட்சியினர் பதில் கொடுக்கவும் என வார்த்தை போர் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ரிலையன்ஸ் நிறுவனம் ரஃபேல் ஒப்பந்தத்தில் இடம் பெற வேண்டும் என இந்திய அரசு தான் வலியுறுத்தியது என பிரான்ஸ் முன்னாள் அதிபர் கருத்து தெரிவித்திருந்தார். இது, பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இந்த ஊழல் தொடர்பாக வழக்கறிஞர் எம்.எல்.ஷர்மா உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தனர். நேற்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் ‘ஒப்பந்தத்தில் கொள்கை முடிவு எடுக்கப்பட்ட விதம், ஒப்பந்தம் எதன் அடிப்படையில் இறுதி செய்யப்பட்டது உள்ளிட்ட தகவல்களை அளிக்க உத்தரவிட்டது.’

ரஃபேல் விமானம் சர்ச்சை பூதாகரமாக வெடித்துள்ள நிலையில், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மூன்று நாள் பயணமாக பிரான்ஸ் சென்றுள்ளார். இது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, “ ரஃபேல் விமானம் தொடர்பாக எடுக்கப்பட்ட முடிவுகள்குறித்து மத்திய அரசிடம் உச்ச நீதிமன்றம் விளக்கம் கேட்டுள்ளது. இது மிகவும் எளிமையானது. பிரதமர் முடிவெடுத்துவிட்டார். அவர் முடிவை நியாயப்படுத்தும் காரணங்கள் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஆனால், வேலை தொடங்கிவிட்டது. இதன் தொடர்பாகவே பாதுகாப்புத்துறை அமைச்சர் பிரான்ஸ் சென்றுள்ளார்” என பதிவிட்டுள்ளார்.


இதையடுத்து, கட்டாயத்தின் பேரில் தான் அம்பானியுடன் Dassault ஒப்பந்தம் நடைபெற்றது என பிரான்ஸ் மீடியா வெளியிட்டுள்ள செய்தி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது. இந்த பிரான்ஸ் பத்திரிகை வெளியிட்டுள்ள செய்தியை டஸ்சால்ட் நிறுவனமும், இந்திய அரசும் மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.