MeToo விவகாரத்தில் சின்மயிக்கு ஆதரவாக பாஜக தலைவர்கள்!

பாடல் ஆசிரியர் வைரமுத்து அவர்கள் மீது பாடகி சின்மயி தெரிவித்துள்ள புகார் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்!

#MeToo என்னும் ஹாஸ்டேக் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமைகள் குறித்து உலகெங்கிலும் உள்ள பெண்கள் தெரிவித்து வருகின்றனர். சமீபத்தில் பாலிவுட் திரையுலகினை கதிகலங்க வைத்த இந்த வழக்கம், தற்போது தமிழகத்தையும் எட்டியுள்ளது.

தற்போது தமிழக திரையுலக பிரபலங்கள் மீதும் #MeToo ஹாஸ்டேக் பயன்படுத்தி பாலியல் வன்கொடுமை புகார்கள் பதியப்பட்டு வரும் நிலையில் சமீபத்தில் பாடகி சின்மயி பாடல் ஆசிரியர் வைரமுத்து மீது பாலியல் புகாரினை பதிவு செய்தார். தனக்கு 17 வயது இருக்கும் போது வைரமுத்து அலுவலகத்திற்கு தான் சென்று இருந்ததாகவும் அப்போது வைரமுத்து தன்னை கட்டி அணைத்து தவறாக நடக்க முயன்றதாகவும் சின்மயி புகார் கூறியிருந்தார்.

வைரமுத்துவிடம் இருந்து தப்பிக்க தனது காலணிகளை கூட எடுக்காமல் வீட்டிற்கு ஓடியதாகவும் சின்மயி அந்த புகாரில் குறிப்பிட்டு இருந்தார். மேலும் சுவிட்சர்லாந்திற்கு இசை நிகழ்ச்சிக்கு சென்று இருந்த போது வைரமுத்து தங்கியிருந்த ஓட்டல் ரூமுக்கு தனியாக செல்லுமாறு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறியதாகவும் சின்மயி குற்றஞ்சாட்டியிருந்தார். ஆனால் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள வைரமுத்து, தன் மீது அநாகரீகமான அவதூறு பரப்பப்படுவதாக விளக்கம் அளித்திருந்தார்.