யாழில் வளர்ந்து வரும் தொழில்முறை கிரிக்கெட்டின் அங்கமாக, யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கத்தின் யாழ்ப்பாணம் சுப்பர் லீக் என்னும் இருபது – 20 கிரிக்கெட் சுற்றுப்போட்டியின், முதலாவது பருவகாலப் போட்டியில் பங்குபற்றுவதற்கான அணிகளின் வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஏலம் யாழ்ப்பாணம் சரஸ்வதி மண்டபத்தில் நடைபெற்றது.
ஜப்னா பந்தேர்ஸ், ரில்லியூர் ரைரன்ஸ், கொக்குவில் ஸ்ரார்ஸ், பருத்தித்துறை சுப்பர் கிங்ஸ், அரியாலை வோரியர்ஸ், பண்ணை ரில்கோ கிளாடியேற்றர்ஸ், நல்லூர் பிறவுண்கொஸ் மற்றும் வேலணை வேங்கைகள் ஆகிய எட்டு அணிகள் உருவாக்கப்பட்டன.
இந்த ஒவ்வொரு அணியையும் 8 உரிமையாளர்கள் கொள்முதல் செய்து, வீரர்களைத் தெரிவு செய்வதற்கான ஏலத்தில் கலந்துகொண்டனர். ஒவ்வொரு அணியும் 75 ஆயிரம் ரூபாய் தொகையில், 15 வீரர்களை ஏலத்தில் எடுத்தல், ஒரே கழகத்தைச் சேர்ந்த 5 வீரர்களை மாத்திரம் ஒரு அணி ஏலத்தில் எடுத்தல் ஆகிய நிபந்தனைகளின் அடிப்படையில் ஏலம் நடைபெற்றது.
ஏற்கனவே அணிகள் தலா 2 வீரர்களை 5 ஆயிரம் ரூபாய் என்னும் அடிப்படை விலையில் தங்களுக்குள் தக்கவைத்துக்கொண்டன. மிகுதி, 13 பேரும் ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
இந்த ஏலத்தில், சென்றலைட்ஸ் விளையாட்டுக்கழத்தைச் சேர்ந்த எஸ்.கௌதமன் ரில்கோ கிளாடியேற்றர்ஸ் அணியினால் 24,500 ரூபாய் என்னும் உச்ச தொகைக்கு எடுக்கப்பட்டார்.
இரண்டாவது அதிகபட்ச ஏலமாக கொக்குவில் மத்திய சனசமூக நிலைய அணியின் எஸ்.சாம்பவன் ஜப்னா பந்தேர்ஸ் அணியினால், 21500 ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.இதற்கு அடுத்தபடியாக சென்றலைட்ஸ் அணியின், ஐ.எட்வேர்ட் எடின், கொக்குவில் ஸ்ரார்ஸ் அணியினால் 20500 ரூபாய் என்னும் தொகைக்கும்,
கிறாஸ்கோப்பர்ஸ் அணியின் எஸ்.அஜித் ரில்லியூர் ரைரன்ஸ் அணியினால் 18500 ரூபாய் என்னும் தொகைக்கும்,சென்றலைட்ஸ் அணியின் ஜெரிக்துசாந்த், அரியாலை வோரியர்ஸ் அணியினால் 17,000 ரூபாய் தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டனர்.
சென்றலைட்ஸ் அணியின் வேகப்பந்துவீச்சாளரும், 23 வயதுப்பிரிவு சுப்பர் மாகாண அணியில், தம்புள்ள அணியை பிரதிநிதித்துவப்படுத்தி விளையாடும் சூரியகுமார் சுஜன் 16000 ரூபாய்க்கு நல்லூர் பிறவுண்கொஸ் அணியினால் ஏலம் எடுக்கப்பட்டார்.8 அணிகளும் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டு போட்டிகள் இடம்பெறவுள்ளன.
போட்டி நடைபெறும் திகதி மற்றும் இடம் என்பன பின்னர் அறிவிக்கப்படும் என யாழ்.மாவட்ட கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது.