பௌத்த மதத்தை சேர்ந்தவள் என்ற அடிப்படையில் மரண தண்டனை தீர்ப்பு உறுதி செய்யப்பட்ட துமிந்த சில்வா தொடர்பில் தாம் கவலையடைவதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா தெரிவித்துள்ளார்.
ஹிருனிக்காவின் தந்தையான பாரத லக்ஷமன் பிரேமசந்திரவை கொலை செய்த குற்றச்சாட்டின்பேரில் துமிந்த சில்வா உட்பட்ட ஐவருக்கு கொழும்பு மேல்நீதிமன்றம் ஏற்கனவே மரண தண்டனை தீர்ப்பை வழங்கியது.
எனினும் அதனை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது, இந்தநிலையில் நேற்று குறித்த மேன்முறையீட்டை நிராகரித்த உயர்நீதிமன்றம், மரண தண்டனையை உறுதிசெய்தது.
இந்தநிலையில் குறித்த தீர்ப்பின்மூலம் நீதித்துறையின் சுயாதீனம் குறித்து தாம் சந்தோசம் அடைவதாக ஹிருனிக்கா இன்று ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதேவேளை மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் பதவியில் இருந்திருக்குமானால் துமிந்த சில்வா விடுதலை செய்யப்பட்டிருப்பார் என்றும் ஹிருனிக்கா குறிப்பிட்டுள்ளார்.