பாலியல் புகார்: கல்லூரி மாணவி நீக்கம்!

பேராசிரியர் மீது பாலியல் புகார் கூறிய திருவண்ணாமலை வேளாண் கல்லூரி மாணவி நீக்கம் குறித்த பலகலைக்கழக முடிவில் எவ்வித மாற்றமும் எனவும், திருச்சி கல்லூரியில் மாணவி சேர விருப்பம் தெரிவித்தால் அதற்கான ஏற்பாடு செய்யப்படும் என்றும் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் ராமசாமி தெரிவித்துள்ளார்.

திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள வேளாண் கல்லூரியில் உள்ள விடுதி காப்பாளரும் உதவி பேராசிரியருமான தங்கபாண்டியன் மீது அக்கல்லூரியில் பி.எஸ்.சி மூன்றாம் ஆண்டு படித்து வந்த மாணவி கிரிஜா என்பவர் பாலியல் புகார் தெரிவித்தார்.சென்னை பெருங்குடியை சேர்ந்தவரான மாணவியான கிரிஜா, கொடுத்த புகாரின் பேரில் நீதிபதி் மகிழேந்தி கல்லூரியில் நேரடியாக விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து உதவி பேராசிரியர் தங்கபாண்டியனை சஸ்பென்ட் செய்தும், விடுதி காப்பாளர்கள் புனிதா,மைதிலி ஆகியோரை வேறு கல்லூரிகளுக்கு மாற்றியும் பல்கலை துணை வேந்தர் ராமசாமி உத்திரவிட்டார்.

மேலும் கல்லூரி மாணவி கிரிஜாவை திருச்சி வேளாண்மை கல்லூரிக்கு மாற்றியும் பல்கலைகழக துணை வேந்தர் ராமசாமி உத்திரவிட்டார். ஆனால் மாணவி திருச்சி வேளாண்மை கல்லூரியில் சேராத நிலையில் மாணவி கிரிஜாவை கடந்த மூன்றாம் தேதி டிஸ்மிஸ் செய்து பல்கலை நிர்வாகம் உத்தரவிட்டது. இந்நிலையில் கல்லூரியில் இருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்ட தன்னை மீண்டும் திருவண்ணாமலை வேளாண்மை கல்லூரியில் சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி மாணவி கிரிஜா இன்று கோவை தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகத்திற்கு மனு அளிக்க வந்தார்.

அவருடன் இந்திய மாணவர் சங்கத்தினரும் மனு அளிக்க வந்துள்ளனர். மாணவியுடன் இந்திய மாணவர் சங்கத்தினர் வந்திருப்பதால் அவர்களை சந்தித்து பேச பல்கலை கழகத்தில் பேராசிரியர்கள் முன் வராததால், துணை வேந்தரை சந்திக்க பாதிக்கப்பட்ட மாணவியும், இந்திய மாணவர் சங்கத்தினரும் துணை வேந்தர் அறை முன்பாக காத்திருந்தனர். இதனையடுத்து துணைவேந்தர் மாணவியை மட்டும் தனியாக அழைத்து நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை.

இதனையடுத்து மாணவி துணைவேந்தர் அறை முன்பாக மாணவர் அமைப்பினருடன் இணைந்து மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து மாணவியையும், இந்திய மாணவர் சங்க மாநில செயலாளர் மாரியப்பனையும் துணைவேந்தர் ராமசாமியிடம் காவல் துறையினர் மீண்டும் அழைத்து சென்றனர்.அப்போது நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் காவல் துறை,நீதிமன்ற விசாரணை அறிக்கை வந்த பின்னர் கமிட்டியில் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததை தொடர்ந்து உடன்பாடு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து  தமிழ்நாடு வேளாண்மை கல்லூரி துணை வேந்தர் ராமசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது திருவண்ணாமலை கல்லூரியில் படிக்க வேண்டும என்று மாணவி கோரிக்கை விடுத்துள்ளார் எனவும், பல்கலை சார்பில் அமைக்கப்பட்ட விசாரணை கமிட்டி ஆசிரியர்களையும், குழந்தைகயையும் தனி தனியாக வைக்க அறிவுறுத்தியுள்ளனர் எனவும் தெரிவித்தார். யார் மீது தவறு இருந்தாலும் பல்கலைகழகம் நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தார்.

மேலும் காவல் துறை ,நீதித்துறை விசாரணை தனித்தனியாக நடைபெறுகின்றது எனவும், விசாரணை அறிக்கை வந்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். தற்போது வேளாண்மை பல்கலை கழகம் எடுத்த நிலையில் எந்த மாற்றமும் இல்லை எனவும்,
திருச்சி கல்லூரியில் மாணவியை உடனடியாக சேரச்சொல்லி அறிவுறுத்தி இருக்கின்றோம் எனவும் தெரிவித்தார்.மேலும் மாணவி வழக்கு விசாரணைக்கு செல்லும் நாட்களில் வருகை பதிவு போடப்படும் எனவும், அதனால் பாதிப்பு ஏற்படாது எனவும் ,ஆசிரியர்களும், மாணவியும் ஓரே வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்குள் பேசி வருகின்றனர் எனவும் தெரிவித்தார்