மனம் மாறிய சசிகலா!’ – பொதுச் செயலாளர் பதவி யாருக்கு?

தவறு செய்வது இயற்கை. அதைத் திருத்திக்கொள்வது மனித மாண்பு. அந்த வகையில் சசிகலா கடிதத்தை வரவேற்கிறேன்.
அ.தி.மு.க-வின் பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடத்த உத்தரவிடுமாறு தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார் சசிகலா.

`18 மாதங்களுக்குப் பிறகு சசிகலா நிலைப்பாட்டில் மாற்றம் வந்திருக்கிறது. எதை அவர் நிராகரித்தாரோ, அதையே மீண்டும் கையில் எடுக்க வேண்டிய சூழல் அவருக்கு வந்திருக்கிறது’ என்கின்றனர் அரசியல் வட்டாரத்தில்.

பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையிலிருந்து தேர்தல் ஆணையத்துக்கு, வழக்கறிஞர் மூலமாகக் கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் சசிகலா.

அந்தக் கடிதத்தில், `அ.தி.மு.க-வின் கட்சி விதிகளில் செய்த மாற்றங்களைத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ளக் கூடாது. அ.தி.மு.க பொதுச் செயலாளர் பதவிக்கு அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் மூலம் உடனடியாகத் தேர்தல் நடத்த ஆணையம் உத்தரவிட வேண்டும்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

அவரது இந்தக் கடிதம் அ.தி.மு.க நிர்வாகிகள் மத்தியில் விவாதப் பொருளாகியுள்ளது. இப்படியொரு கடிதம் வெளியாவதற்கு மூல காரணமாக இருந்தவர் அ.தி.மு.க-வின் முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி. அ.தி.மு.க-வின் கட்சி விதிகளில் செய்த திருத்தங்களை ரத்து செய்யக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், `வழக்கு தொடர்பாக மனுதாரர் உட்பட அனைவரும் தங்களது கருத்துகளைத் தலைமை தேர்தல் ஆணையத்தில் எழுத்துபூர்வ பிரமாண பத்திரத்தைத் தாக்கல் செய்ய வேண்டும்.

அனைத்துப் பிரமாண பத்திரங்களையும் பரிசீலனை செய்து அடுத்த 4 வாரத்தில் வழக்கின் இறுதி உத்தரவை தலைமைத் தேர்தல் ஆணையம் பிறப்பிக்க வேண்டும்’ எனக் கடந்த மாதம் 13-ம் தேதி உத்தரவிட்டிருந்தது.

அதன் அடிப்படையில் நேற்று முன்தினம் எடப்பாடி பழனிசாமி, பன்னீர்செல்வம் சார்பாக, தேர்தல் ஆணையத்தில் பதில் மனுவைத் தாக்கல் செய்தார் சி.வி.சண்முகம். இந்நிலையில், பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் என்பதை வலியுறுத்தி, சசிகலா அனுப்பியிருக்கும் கடிதம் விவாதமாகியிருக்கிறது.

கே.சி.பழனிசாமியிடம் பேசினோம். “இன்று சசிகலா எடுத்துள்ள நிலைப்பாடு எனக்குக் கிடைத்த முதல் வெற்றி. சசிகலா எடுத்துள்ள பன்னீர்செல்வம்நிலைப்பாட்டை வரவேற்கிறேன்.

`அடிப்படை உறுப்பினர்களால் பொதுச் செயலாளர் தேர்வு செய்யப்பட வேண்டும்; சசிகலா தேர்வு செய்யப்பட்ட முறை தவறு’ எனத் தேர்தல் ஆணையத்தில் முதல்முதலாக மனு கொடுத்திருந்தேன்.

அ.தி.மு.க-வில் அதிக அதிகாரம் மிக்க பதவி என்பது பொதுச் செயலாளர் பதவிதான். இந்த அதிகாரத்தைக் கொடுத்த எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் தீர்க்கதரிசிகள்.

அவர்கள் இருவருக்கும் தங்களைச் சுற்றியிருக்கிற நிர்வாகிகளைவிட, அடிப்படை உறுப்பினர்கள் மீதுதான் அதிக நம்பிக்கை இருந்தது.

காரணம், `கட்சியின் நிர்வாகிகள் தங்கள் சுயநலனுக்காக மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்துவிடுவார்கள்’ என்பதுதான். தொண்டர்கள்தான் இந்த இயக்கத்தைக் கட்டிக் காப்பாற்றுவார்கள் என நம்பினார்கள்.

அதனால்தான் பொதுச் செயலாளரைத் தேர்வு செய்யும் உரிமையைத் தொண்டர்கள் கைகளில் கொடுத்தார்கள். அப்படிப்பட்ட உரிமை, முதலில் சசிகலாவால் மறுக்கப்பட்டது.

அதை எதிர்த்து நான் போராடினேன். இப்போது ஓ.பி.எஸ்ஸும் ஈ.பி.எஸ்ஸும் அந்த உரிமையைப் பறித்துவிட்டார்கள். இந்த விவகாரத்தில் சசிகலாவாவது மறுப்பு தெரிவித்தார். இவர்கள் ஒட்டுமொத்தமாக அந்த உரிமையையே பறித்துவிட்டனர்.

இதை எதிர்த்து நான் தொடர்ந்த வழக்கில், `தேர்தல் ஆணையம் நான்கு வாரத்துக்குள் உத்தரவு போட வேண்டும்; முதல் நான்கு வாரத்தில் ஓ.பி.எஸ், ஈ.பி.எஸ் பதில் அளிக்க வேண்டும்’ என நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர்” என்றவர்,

“தொண்டர்களின் உரிமைகள் நிலைநாட்டப் பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. சசிகலா மனு கொடுத்ததில் உண்மையில் மகிழ்ச்சி.

18 மாதம் கழித்து அவர் தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றியிருக்கிறார். இதே நிலைப்பாட்டை எடப்பாடியும் பன்னீர்செல்வமும் எடுக்க வேண்டும்.

அதற்கான தூண்டுதலை அம்மாவின் ஆன்மா அவர்களுக்கு வழங்க வேண்டும். பதவி இருக்கும் வரையில்தான் அவர்களுக்குப் போலீஸ் பாதுகாப்பு இருக்கும்.

அடிப்படைத் தொண்டர்கள்தான் வலிமையானவர்கள். எம்.ஜி.ஆர் கொடுத்த வலிமை என்ன என்பதைத் தொண்டர்கள் புரிந்துகொண்டாலே போதும்.

தவறு செய்வது இயற்கை. அதைத் திருத்திக்கொள்வது மனித மாண்பு. அந்த வகையில் சசிகலா கடிதத்தை வரவேற்கிறேன். பொதுச் செயலாளர் பதவிக்குத் தேர்தல் நடந்தால் நிச்சயமாக நான் போட்டியிடுவேன்.

இவர்கள் மறுபடியும் சசிகலா காலில் விழுந்து ஏற்றுக்கொள்வார்கள். அதை நான் எதிர்த்து நிற்பேன். தேர்தலில் இறுதிப் போட்டி எனக்கும் சசிகலாவுக்கும் இடையில்தான் நடக்கும்.

நீதிமன்றம் கொடுத்த காலக்கெடு வரும் நவம்பர் 9-ம் தேதிக்குள் முடிகிறது. அதற்குள் தேர்தல் ஆணையம் பதில் சொல்ல வேண்டும்.

`இவர்கள் என்ன பதில் கொடுத்திருக்கிறார்களோ அதன் நகலை எனக்கும் தர வேண்டும்’ எனத் தேர்தல் ஆணையத்தில் கேட்டிருக்கிறேன். அதன் அடிப்படையில் என்னுடைய மறுப்பைத் தெரிவிப்பேன்.

எடப்பாடி பழனிசாமி என்ன நினைக்கிறார் என்றார், தனக்கு மோடி துணையாக இருக்கிறார்; மத்திய அரசு துணையாக இருக்கிறது என நம்புகிறார். ஒன்றரைக் கோடித் தொண்டர்கள் நினைத்தால் இங்கே எதுவும் நிரந்தரமில்லை என்பதை இவர்கள் விரைவில் உணர்வார்கள்” என்றார் பொறுமையாக.