கிணறு ஒன்றில் இருந்து 5 குழந்தைகளின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளமை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் பர்வானி மாவட்டத்திலேயே இவ்வாறு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது.3 முதல் 7 வயதுக்கிடைப்பட்ட குழந்தைகளே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என தெரவிக்கப்படுகிறது. மேலும் குழந்தைகளின் பெற்றோர் மாயமாகியுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
பட்டார் சிங் என்பவரின் பிள்ளைகளே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 40 வயதுடைய பட்டார் சிங்கிற்கு இரண்டு மனைவிகள். முதல் மனைவிக்கு 4 குழந்தைகளும், இரண்டாவது மனைவிக்கு ஒரு குழந்தையும் உள்ளனர்.இந்நிலையில், குறித்த 5 குழந்தைகளும் நேற்று மர்மமான முறையில் உயிரிழந்துள்ள நிலையில், பட்டார் சிங் மற்றும் அவரது முதல் மனைவி மாயமாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அவரின் இரண்டாவது மனைவி தனது ஒரே பிள்ளையை இழந்த நிலையில் பேச்சுமூச்சின்றி உள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
காணாமல் போயுள்ள தம்பதியினை தேடி காவற்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். எவ்வாறாயினும், காணாமல் போனவர்கள் கண்டுபிடிக்கப்பட்டால் மட்டுமே மேலதிக விசாரணைகளை மேற்கொள்ள முடியும் என காவற்துறையினர் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.