குழந்தைக்கு அரணாக இருந்து காயம்பட்ட பாசக்கார அம்மா…??

தன் குழந்தையை, தானே கவசமாக இருந்து ஆலங்கட்டி மழையிலிருந்து காப்பாற்றியுள்ளார் ஒரு தாய். இதனால் அவரது உடல் முழுவதும் படுகாயங்கள் ஏற்பட்டுள்ளன.

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பகுதியைச் சேர்ந்த ஃபியோனா சிம்ப்சன் தனது குழந்தையுடன் காரில் சென்று கொண்டிருக்கும்போது கடும் ஆலங்கட்டி மழை பொழிய ஆரம்பித்தது. கார் ஓட்ட முடியாத அளவு மழை பொழிய ஆரம்பித்ததால், வண்டியை ஓரங்கட்டியுள்ளார் ஃபியோனா. தொடர்ந்து பெய்த ஆலங்கட்டி மழை இவரது கார் கண்ணாடியையும் உடைத்துள்ளது.

இதனால் பின் சீட்டில் தனியாக இருந்த குழந்தைக்குக் ஆலங்கட்டி பட்டு காயம் ஏற்படும் நிலை உருவானது. உடனே ஃபியோனா பின் சீட்டுக்குத் தாவி, தன் குழந்தையைச் சுற்றி உடலைக் கவசம் போல மூடி உட்கார்ந்துள்ளார். தொடர்ந்து பொழிந்த ஆலங்கட்டி, ஃபியோனாவின் முதுகு, கழுத்து, முகம் என அனைத்தையும் பதம் பார்த்தது.

உடலில் படுகாயம் ஏற்பட்டும், மழை முடியும்வரை ஃபியோனா குழந்தையை விட்டு எழவில்லை. காரில் குழந்தையின் பாட்டியும் இருந்துள்ளார்.

வீட்டுக்கு வந்த ஃபியோனா, தன் காயங்களுக்கு நல்ல மருந்து என்ன என்று கேட்டு தனது ஃபேஸ்புக்கில் தனது புகைப்படத்துடன் அனுபவத்தையும் பகிர, உடனே அவுஸ்திரேலிய ஊடகங்கள், இந்த பாசக்காரத்தாயை பிரபலமாக்கிவிட்டன.

இனி எப்போதும் புயல் எச்சரிக்கை இருக்கும்போது, ஆலங்கட்டி மழை பொழியும் போது காரை எடுத்துக் கொண்டு வெளியே செல்ல மாட்டேன் என ஃபியோனா கூறியுள்ளார்.