யாழ்ப்பாணம் தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து அளவெட்டிப் பக்கம் செல்லும் வீதியில் நேற்று இரவு இடம்பெற்ற விபத்தையடுத்து, பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே முறுகல் நிலமை ஏற்பட்டது.சுமார் ஒன்றரை மணி நேரம் நீடித்த முறுகல்நீடித்த முறுகல் நிலமை, பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உறுதிமொழியை அடுத்து முடிவுக்கு வந்தது.வல்லை – அராலி வீதியில் தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து அளவெட்டிப் பக்கமாக செல்லுத் திசையில் சுமார் ஒரு கிலோ மீற்றர் தூரத்தில் நேற்று இரவு 7.30 மணிக்கு விபத்து நடந்துள்ளது.
தெல்லிப்பழைச் சந்தியை நோக்கி வந்த மூடுந்தும் (ஹையேஸ்), தெல்லிப்பழைச் சந்தியிலிருந்து சென்ற உந்துருளியும் மோதிக் கொண்டன. உந்துருளியில் சென்ற இளைஞர்கள், தமது பயணத் திசைக்கு எதிர் திசையில் திருப்ப முயன்றுள்ளனர்.
இதன்போது ஹையேஸ் அவர்களை மோதியுள்ளது. மூடுந்துடன்(ஹையேஸ்) உந்துருளி சில மீற்றர் தூரம் இழுத்துச் செல்லப்பட்டுள்ளது. இளைஞர்கள் இருவரும் படுகாயமடைந்துள்ளனர். உடனடியாக இருவரும் தெல்லிப்பழை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
ஒரு இளைஞன் உடனடியாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். மற்றைய இளைஞன் சுமார் அரை மணிநேரத்தின் பின்னர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். இளைஞர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் நேரத்தில், மூடுந்தின்(ஹையேஸ்) சாரதி அங்கிருந்து காணாமல் போய்விட்டார்.சம்பவ இடத்துக்கு வந்த தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பொலிஸார், மூடுந்தை அங்கிருந்து அகற்ற முற்பட்டனர். அங்கு திரண்ட மக்கள், மூடுந்தை எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று தெரிவித்தனர்.
போக்குவரத்துப் பொலிஸாருக்கும், மக்களுக்கும் இடையே முறுகல் நிலமை ஏற்பட்டது. பின்னர் தெல்லிப்பழை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சம்பவ இடத்துக்கு வந்துள்ளார்.
மக்களுடன் பேசி மூடுந்தை அகற்ற முயற்சித்தார். மக்கள் அதற்குச் சம்மதிக்கவில்லை. சாரதி தப்பி ஓடியுள்ளார். இந்த நிலையில் மூடுந்தையும் எடுக்க அனுமதித்தால் வழக்கை மாற்றி எழுதுவிடுவீர்கள். மூடுந்துக்குள் என்ன இருக்கின்றது என்பதைப் பார்க்கவேண்டும் என்று மக்கள் கோரியுள்ளனர்.
மூடுந்தில் சாராயப் போத்தல் இருந்தமையை மக்கள் கண்டுள்ளனர். பொலிஸாருக்குத் தெரியப்படுத்தினர். சாரதியை சம்பவ இடத்துக்கு அழைத்து வரவேண்டும் என்று கேட்டுள்ளனர். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலையத்துக்கு மக்களை வருமாறும், மூடுந்தை எடுத்துச் செல்ல அனுமதிக்குமாறு கோரியுள்ளார்.
இதற்கிடையில் இந்த முறுகல் நிலமையால் வீதியின் ஊடான போக்குவரத்தும் தடைப்பட்டிருந்தது. காங்கேசன்துறைப் பொலிஸாரும் சம்பவ இடத்துக்கு வந்தனர். பொலிஸாரை நம்ப முடியாது என்று தெரிவித்த மக்கள், மூடுந்தை ஊடகங்கள் படம் எடுக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளனர். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி அதற்கு இணங்கியுள்ளார்.
படம் எடுத்த பின்னர், பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியின் உறுதிமொழிக்கு அமைவாக மூடுந்தை எடுக்க மக்கள் சம்மதித்தனர். மூடுந்து, உந்துருளி என்பன பொலிஸ் நிலையம் கொண்டு செல்லப்பட்டது.மூடுந்தின் சாரதி பொலிஸ் நிலையத்தில் ஏற்கனவே சரணடைந்துள்ளார். இதனையடுத்து இரவு 9 மணியளவில் பொலிஸ் நிலையத்திலிருந்து மக்கள் வெளியேறினர்.