மாணவர்களின் நடைபயணத்தில் நேரில் சென்று கைகோர்த்த டக்ளஸ் தேவானந்தா!

தமிழ் அரசியல்கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நடைபயணம் மேற்கொண்டுள்ள பல்கலைகழக மாணவர்களிற்கு ஈ.பி.டி.பியும் தமது ஆதரவை தெரிவித்துள்ளது. ஈ.பி.டி.பியின் செயலாளர் டக்ளஸ் தேவானந்தா அநுராதபுரத்திற்கு நேரில் சென்று, நடைபயணத்தில் ஈடுபடும் மாணவர்களிற்கு தமது ஆதரவை தெரிவித்துள்ளார்.

அங்கு கருத்து தெரிவித்த மக்ளஸ் தேவானந்தா- “தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்தும் சிறைகளில் அடைத்து வைப்பதில் அர்த்தமில்லை. அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி இலங்கை அரசு தமது நல்லெண்ணத்தை தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும்.

அத்துடன் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை வரவு செலவுத்திட்டம் மீதான ஆதரவு நிபந்தனையாக அரசுக்கு முன்வைக்க வேண்டும். தமது பிர்ச்சனை களைக்கான தீர்வுகளை வலியுறுத்தி தமிழ் மக்கள் இன்று வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர் இந்த நிலையில் தாமே இந்த அரசை ஆட்சிபீடம் ஏற்றியதாக தம்பட்டம் அடிக்கும் கூட்டமைப்பினர் தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்காமல் கண்மூடித்தனமாக அரசுக்கு முண்டு கொடுப்பது கண்டிக்கத்தக்கதாகும்“ என்றும் தெரிவித்தார்.