ஆண்டாளை பழித்த கவிஞர் வைரமுத்துவின் முகத்திரையை சின்மயி மூலம் ஆண்டாளே கிழிக்கிறார் என்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்தார்.
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் சபரிமலை வழக்கில் நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து சத்யபிரமாணம் ஏற்கும் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாஜகவின் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்திரராஜன், மற்றும் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் தமிழிசை பேசியதாவது:
100 ஆண்டுகளாக தொன்று தொட்டு வரும் பழக்கம் மதிக்கப்பட வேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 படி மத நம்பிக்கைகள் மதிக்கப்பட வேண்டும் அது இந்து மதத்திற்கும் பொருந்தும். எதிர்க்கட்சியினர் விநாயகர் சதுர்த்தி வாழ்த்து கூட தெரிவிப்பது இல்லை. அவ்வளவு தீண்டத்தகாத மதமாகிவிட்டதா இந்து மதம்? ஆண்டாளை விமர்சித்த கவிஞருக்கு ஆண்டாள் சின்மயி வடிவத்தில் வந்து முகத்திரையை கிழிக்கிறார் என்றார்.
கூட்டத்தின் இறுதியில் மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஐயப்பன் படத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு குழுமியிருந்த அனைவரும் கோவில் மரபுகளை கடைபிடிப்பதாகவும் பெண்கள் கோவிலுக்கு செல்லமாட்டோம் என்று சத்யபிரமாணம் ஏற்றனர்.