ஒரு பெரிய சங்கீத வித்வானால் தனது தாயாரின் சங்கீத வாழ்க்கை பாழானதாக பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
மீ டூ ஹேஷ்டாக் மூலம் தற்போது பிரபலங்களால் அனுபவித்த பாலியல் சீண்டல் குறித்து பெண்கள் பதிவிட்டு வருகின்றனர். தனுஸ்ரீ தத்தா உள்ளிட்ட பல நடிகைகள் பாலிவுட் கலைஞர்களைப் பற்றி பதிந்து வருகின்றனர். பாடகி சின்மயி சில வருடங்களுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து தன்னை பாலியல் உறவு கொள்ள அழைத்ததாக குற்றம் சாட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது. அத்துடன் அவர் தந்து டிவிட்டரில் இது போன்ற பெண்களின் புகார்களை தொடர்ந்து பகிர்ந்து வருகிறார்.
தற்போது ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பாடகி சின்மயி, “கர்நாடக சங்கீத உலகிலும் இது போல பாலியல் தொல்லைகள் உண்டு. அதனால் தான் பலர் இசை பயிற்சியையும் பரத நாட்டியத்தையும் மிருதங்கத்தையும் விட்டு விட்டு வந்ததாக கூறி உள்ளனர். இது போல எங்கள் வாழ்க்கையிலும் நடந்துள்ளது.
என் அம்மாவின் சங்கீத வாழ்க்கை ஒரு பெரிய வித்வானால் பாழனது. நான் கடந்த 90 களில் வித்வான்களின் அதிகார வட்டங்களால் எங்களை எப்படி எல்லாம் அச்சுறுத்த முடியும் என்பதை பார்த்து இருக்கிறேன். என் அம்மா ரு ஆவணப்படம் செய்திருந்தார். ஆனால் அதை என் அம்மா செய்ததாக சொல்லக்கூடாது என அந்த வித்வான் மிரட்டி உள்ளார். அதற்கு என் அம்மா ஒப்புக் கொள்ளாததால் அவர் சங்கீத வாழ்வு பாழானது
என் அப்பாவிடம் இருந்து விவாகரத்து பெற்ற என் அம்மாவுக்கு அப்பா ரூ.500 மட்டுமே தருவார். அதனால் நாங்கள் கடும் ஏழையாக இருந்தோம். ஒரு லிட்டர் பாலுடன் ஒரு வாரத்தை கழித்துள்ளோம். அதனால் எனது அம்மா வேலைக்கு செல்ல முயன்ற போது இந்த வித்வான் அவருக்கு வேலை கொடுக்க கூடாது என தடை செய்வார்.
நான் எனது ஏழ்மையால் கல்விக்கட்டணம் செலுத்த மிகவும் துயருற்றேன். அதனால் நான் பத்தாம் வகுப்புக்குப் பின் உழைத்து தொலை தூரக்கல்வியில் சேர்ந்து படித்தேன். கர்நாடக சங்கீத உலகில் இது போல நிறைய நடக்கிறது. எங்கெல்லாம் பக்தி, பவித்ரம் என பேசப்படுகிறதோ அந்த மத நிறுவனங்களில் இது போல நிறைய நிகழ்வுகள் நடக்கின்றன” என தெரிவித்துள்ளார்.