“விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார். மீண்டும் தமிழீழம் கோரும் போராட்டம் வெடிக்கும். அதற்கு பிரபாகரன் தலைமை ஏற்பார்’ என் பழ. நெடுமாறன் தெரிவித்துள்ளார்.
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் இன்று ராமநாதபுரத்தில் செய்தியாளர்களை சந்திதித்தார். அப்போது அவர் பேசியதாவது:
”இலங்கை கடற்படையினரால் பிடித்துச் செல்லப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகளில் சுமார் 150 படகுகள் மீண்டும் பயன்படுத்த இயலாத நிலையில் இலங்கையில் மூழ்கிக் கிடக்கின்றன. அவற்றை மீட்டு வருவதை விட அந்த படகுகளுக்கு இலங்கை அரசிடம் இருந்து நஷ்ட ஈட்டு தொகையினை பெற்றுத் தருவதே சரியாகும். அல்லது மத்திய அரசு அந்த தொகையினை மீனவர்களுக்கு அளிக்க வேண்டும்.
இறைவனை வழிபடுவதில் அனைவருக்கும் சம வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். இதையொட்டித்தான் சபரிமலைக்கு எல்லா வயதுடைய பெண்களும் செல்லலாம் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சபரிமலை கோயிலில் மட்டும்தான் பெண்கள் செல்ல முடியாத நிலை நிலவுகிறது. மற்ற ஐயப்பன் ஆலயங்களுக்கு எல்லாம் பெண்கள் சென்று வழிபடுகின்றனர். ஆகவே அனைத்து வயது பெண்களையும் சபரிமலை கோயிலுக்கு அனுமதிப்பதை வரவேற்கிறேன்.
மாநில சுயாட்சிக்கு குரல் கொடுத்து வரும் தி.மு.க, முதல்வர் பழனிசாமி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க மத்திய அரசின் கையில் உள்ள சி.பி.ஐ-யின் விசாரணையைக் கோருகிறது. இதன் மூலம் மாநில சுயாட்சிக் கொள்கைக்கு எதிராக தி.மு.க. நடந்து கொண்டுள்ளது. இந்த விவகாரத்தில் உயர் நீதிமன்றம் சி.பி.ஐ விசாரணைக்குத்தான் உத்தரவிட்டுள்ளதே தவிர தண்டனை அளித்துவிடவில்லை. ஆகவே, இப்போதே முதல்வர் பழனிசாமி பதவி விலகத் அவசியமில்லை. தமிழக உயர்கல்வித் துறை, ஊழல் மிகுந்ததாக உள்ளது. மாணவர் சேர்க்கையில் ஆரம்பித்து, துணை வேந்தர் நியமனம் வரை புகார் எழுந்துள்ளது. ஆகவே, இதுகுறித்து விசாரிக்கத் தனி ஆணையம் அமைக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் பேச்சுரிமை, எழுத்துரிமை, கருத்துரிமை உள்ளிட்டவை முற்றிலுமாக பறிக்கப்பட்டு வருகிறது.
இலங்கையில் தமிழர்களின் வாழ்வாதாரம் இன்னும் சீர் செய்யப்படவில்லை. ஆகவே அங்கு மக்கள் போராட்டம் நடத்த ஆரம்பித்திருக்கிறார்கள். . இதுபோன்ற பிரச்சனைகள் தொடர்வதால், அங்கு தமிழீழம் அமைய வேண்டும் என்ற போராட்டம் வெடிக்கும். விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் இறுதிக் கட்ட போரில் கொல்லப்படவில்லை. அவர் நலமுடன் இருக்கிறார். இலங்கை தமிழர்களின் உரிமை போராட்டக் களத்தில் உரிய நேரத்தில் பிரபாகரன் வெளிப்படுவார் ” என்று பழ. நெடுமாறன் தெரிவித்தார்.