அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறும்: மாணவர்கள் எச்சரிக்கை

எமது கோரிக்கைகளுக்கு வெறும் வாக்குறுதிகளை வழங்கி கடந்துபோக நினைத்தால் சிறுபான்மை தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் வலுப்பெறும் என வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் எச்சரித்துள்ளனர்.

தமிழ் அரசியல்கைதிகள் விடுதலைக்கான மாணவரெழுச்சிப் போராட்டத்தை முன்னெடுத்துவரும் யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் வடக்கு, கிழக்கு தமிழ் மாணவர்கள் ஆகியோரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

”தனிமனித உரிமைகளிலும் அவற்றின் முன்னேற்றங்களிலும் அக்கறைகொண்ட நாடுகளால்தான் தமது வளர்ச்சிப்பாதையில் பெரும் முன்னேற்றகரமாச் செயற்பட முடிகின்றன. அவ்வாறு முடியாத நாடுகளினாலும் அதன் அரசுகளினாலும் எந்தவிதமான முன்னேற்றம் மற்றும் வளர்ச்சிபற்றியும் சிந்திக்கக்கூட முடியாது.

நீதிக்குப்புறம்பாக சிறை வைக்கப்பட்டிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் விடயமானது ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் கைதிகளின் சட்ட நடைமுறைக்கு முற்றிலும் முரணானது.

எனவே, இலங்கையின் எல்லாச் சிறைகளிலுமுள்ள அரசியல் கைதிகளை எதுவித நிபந்தனைகளுமின்றி உடனடியாக விடுதலைசெய்து, அவர்களது இயல்புவாழ்க்கைக்கு வழிகோல வேண்டும்.

தமிழர்களைச் சிறுமைப்படுத்தி ஒடுக்குவதற்காகப் பயன்படுத்தப்படுகின்ற பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு பாரபட்சமில்லாத நீதிவிசாரணைகள் இடம்பெறவேண்டும்.

இலங்கை அரச படையினரால் காணாமலாக்கப்பட்டவர்களுக்கான பொறுப்புக்கூறல் சர்வதேசப் பொறிமுறைகளுக்கு அமைவாக, முறையாக இடம்பெறவேண்டும்.

இவற்றை தாமதமின்றி நடைமுறைப்படுத்துவதனூடாக தமிழர்களதும், ஏனையவர்களதும் இயல்பு வாழ்க்கைக்கு வழியமைக்க வேண்டும். இவற்றை நடைமுறை சாத்தியமில்லாத கோரிக்கைகளாக நாம் உங்களிடம் முன்வைக்கவில்லை. மாணவர்களாகிய நாம் அறிவுபூர்வமாக எல்லோரதும் நன்மைபற்றியே சிந்தித்துச் செயலாற்ற விழைகின்றோம்.

மாறாக, இவற்றை வெறும் வாக்குறுதிகளை வழங்கி நீங்கள் கடந்துபோக நினைத்தால் சிறுபான்மைத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான போராட்டங்கள் ஓய்ந்துபோகப்போவதில்லை. நாங்கள் சிந்திப்பதுபோலவே, எங்களைக் கடந்தும் எங்கள் அடையாளங்களையும், இறைமயையும் தேடி ஒரு இனமே எழுச்சிகொள்ளும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.