தமிழகத்தில் மனைவியை அழைத்து வந்த புதுமாப்பிள்ளையை தாக்கி நகை, செல்போன் போன்றவைகளை பட்டப்பகலில் பறித்து சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையை அடுத்த பல்லாவரத்தை சேர்ந்தவர் கதிரவன். இன்ஜினியரான இவருக்கும், அனிதா என்ற பெண்ணுக்கும் கடந்த 20 நாட்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில் இவர்கள் இருவரும் வால்மிகி நகரில் இருக்கும் கடற்கரைக்கு இன்று முற்பகல் 11 மணிக்கு சென்றுள்ளார்.
அப்போது திடீரென்று இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், இந்த புதுமணத்தம்பதியை வழிமறித்தனர். அவர்கள் அனிதா அணிந்திருந்த தாலி மற்றும் செயின், தங்க நகைகளைக் கழற்றி கொடுக்கும்படி மிரட்டியுள்ளனர்.
இதனால் அவர்களிடமிருந்து தப்பிப்பதற்கு இருவரும் போராடியுள்ளனர். அந்த நேரத்தில் அந்த மர்ம நபர்கள் கதிரவனின் தலையில் பலமாக இரும்பு கம்பியால் அடித்தனார்.
இதன் காரணமாக கதிரவன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினார். அதன் பின் அனிதாவிடமிருந்த நகைகளை பறித்துவிட்டு அந்த நபர்கள் இரு சக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளனர்.
அனிதாவின் அலறல் சத்தத்தைக் கேட்டு ஓடி வந்த அருகில் இருந்த மக்கள் உடனடியாக பொலிசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
விரைந்து வந்த பொலிசார், கதிரவன் மற்றும் அனிதாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் கதிரவன் உயிருக்கு போராடிய நிலையில், அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவ இடத்திலிருந்த சிசிடிவி காட்சிகளை பொலிசார் ஆராய்ந்து, தப்பியோடிய மர்ம நபர்களைத் தீவிரமாகத் தேடிவருகின்றனர். மேலும் கதிரவன் அடையாற்றில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.