யாழ்ப்பாணத்தில் நாணயத்தால் சாத்துப்படி செய்யப்பட்ட பிள்ளையார் தொடர்பில் தென்னிலங்கை ஊடகங்கள் கவனம் செலுத்தியுள்ளன.அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள பிள்ளையார் ஆலயம் ஒன்றில் விநாயகருக்கு நாணயத்தாள்களால் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடைபெற்றது.
இந்த செயற்பாடு குறித்து பொலிஸார் மற்றும் பொதுமக்கள் அதிருப்தி வெளியிட்டுள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.நாணயத்தாள்களால் அலங்கரிக்கப்பட்டுள்ள விநாயகர் விக்ரத்திற்கு பாதுகாப்பு இல்லாமையினால் எதிர்ப்பு வெளியிட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
விக்ரத்திற்கு பாதுகாப்பு இல்லாத நிலையில் அதனை சுற்றி பண நாணயத்தாள்கள் தொங்கவிடப்பட்டிருப்பதனால் திருடர்களினால் திருடி செல்லப்படும் என்ற அச்சமே இந்த எதிர்ப்பிற்கு காரணமாகியுள்ளது.20, 50, 100, 1000, 5000 ரூபா நாணயத்தாள்களைப் பயன்படுத்தி விநாயகர் விக்கிரகத்துக்கு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
ஆலயத்தில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யும் வரை, நாணயத்தாள்களை கொண்ட மாலையை பாதுகாப்பாக வேறு இடத்தில் வைக்குமாறு ஆலய பொறுப்பாளர்களிடம் தெரிவித்துள்ளனர்.எனினும், இதுவரையில் அந்த ஆலயத்தின் பொறுப்பாளர்கள் அக்கறை செலுத்தவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
யாழ்ப்பாண ஆலயங்களின் உண்டியல்களை உடைத்து பணம் திருடும் சம்பவங்கள் தொடர்பில் அதிக முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. இந்நிலையில் திருடர்கள் மிகவும் இலகுவாக திருடி செல்ல முடியும் என பொலிஸார் தெரிவித்துள்ளதாக தென்னிலங்கை ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.