ஆண்டாளை பழித்த கவிஞர் வைரமுத்துக்கு, தற்போது ஆண்டாள் மற்றொரு பெண் வடிவத்தில் வந்து தக்க பாடம் புகட்டி வருவதாக பாஜக தமிழ் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடை பெற்று வரும் நிலையில், நீதிமன்றத்தின் தீர்ப்பை கண்டித்து சத்ய பிரமாணம் ஏற்கும் கூட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.
மேடையில் அலங்கரிக்கப்பட்டிருந்த ஐயப்பன் படத்திற்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு குழுமி யிருந்த அனைவரும் கோவில் மரபுகளை கடைபிடிப்பதாகவும் பெண்கள் கோவிலுக்கு செல்லமாட்டோம் என்று சத்ய பிரமானம் ஏற்றுக்கொண்டனர். இதில் நூற்றுக்கணக்கான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்துகொண்டனர். இதில், தமிழக பாஜக தலைவர் தமிழிசை, பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா உள்பட பாஜகவினரும், இந்து அமைப்பினரும் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் பேசிய தமிழிசை, சபரிமலை விவகாரத்தில் 100 ஆண்டுகளாக கடைபிடிக்கப்பட்டு வரும் பாரம்பரிய பழக்கம் மதிக்கப்படவேண்டும். அரசியலமைப்பு சட்டம் பிரிவு 25 படி மத நம்பிக்கைகள் மதிக்கப்படவேண்டும்.. அது இந்து மதத்திற்கும் பொருந்தும் என்று கூறினார்.
தற்போது, வாக்கு வங்கிக்காக சிறுபான்மையினரை தாஜா செய்வதும், பெரும்பான்மையினரை உதாசீனப்படுத்தும் செயல்கள் நடைபெற்று வருகின்றனர். எதிர்க்கட்சியினர் விநாயகர் சதுர்த்திக்கு கூட வாழ்த்து கூட தெரிவிப்பது இல்லை. அவ்வளவு தீண்டத்தகாத மதமாகிவிட்டதா இந்து மதம் எனவும் என ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மத உணர்வும் பண்பாடும் எதிர்க்கப்பட்டால் பொங்கி எழுவோம் என்பதை இந்த கூட்டம் மெய்பித் துள்ளது என்றவர், ஏற்கனவே ஆண்டாளை விமர்சித்த கவிஞர் தற்போது பாலியல் புகாரில் சிக்கி உள்ளார்… அவரது முகத்திரையை ஆண்டாள் மற்றொரு பெண் வடிவத்தில் கிழித்துக்கொண்டி ருக்கிறாள் என்று கடுமையாக சாடினார்.
இதையடுத்து பேசிய எச்.ராஜா, இந்து மதத்தில் உள்ளது போல் சமநிலை வேறு எந்த மதத்திலும் இல்லை பெண்களை கடவுளாக பார்க்கும் மதம் இந்து மதம் என்றார். இனி குடும்பத்தில் பிறக்கும் முதல் பெண் குழந்தைக்கு இந்து என பெயர் சூட்டுங்கள் என கேட்டுக்கொண்ட அவர் ஆண்டாள் சாபம் ஆயுள் முழுவதும் தாபம் என்றார். இந்துக்கள் அனைவரும் ஒன்றுபட்டு போராடினால் மறுசீராய்வு மனுவில் நமக்கு சாதகமான முடிவு கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
ஆண்டாள் குறித்து வைரமுத்து கூறியது என்ன?
கவிஞர் வைரமுத்து ‘தமிழை ஆண்டாள்’ என்ற கட்டுரை ஒன்றை கடந்த சில மாதங்களுக்கு முன்பு தினமணி நாளிதழில் எழுதியிருந்தார். அதில் “ஆண்டாள் பெரியாழ்வார்க்குப் பிறந்த பெண் இல்லை ஆதலாலும், அவள் பிறப்பு குறித்த ஏதும் பெறப்படாத தாலும், ஓர் அந்தணரே வளர்த்திருந்தாலும், குலமறியாத ஒருத்தியைக் குலமகளாய்க் கொள்ள சாதிக் கட்டுமான முள்ள சமூகம் தயங்கியிருக்கலாம் என்பதனாலும், சமூகம் வழங்காத பாலியல் சொல் விடுதலையை ஆண்டாளே ஆவேசமாய் அடைந்துவிட்டதாலும், கோயிலுக்குப் பெண்ணைக் காணிக்கையாக்குவதை அரசும் சமூகமும் அங்கீகரித்ததாலும் கலாசார அதிர்ச்சி தரத்தக்க முடிவுக்குச் சில ஆய்வாளர்கள் ஆட்படுகிறார்கள்.” என்றும் ஒரு இடத்தில் எழுதியுள்ளார்.
இதற்கு சான்றாக அமெரிக்காவின் நூலை மேற்கோள் காட்டியிருந்தார். இதையே ராஜபாளையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றிலும் பேசினார்.
இந்த விவகாரம் பெரும் பிரச்சினையை எழுப்பியதை தொடர்ந்து, அவர் வருத்தம் தெரிவித்தார். மேலும் அவர்மீதான பல வழக்குகள் நிலுவையில் உள்ளது.
இந்த நிலையில் தற்போது, பாடகி சின்மயி, கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார்களை கூறி உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழிசை அதை மேற்கொள்காட்டி பேசி உள்ளார்.