கல்லூரி மாணவியின் பொம்மைக்கு இறுதிச் சடங்கு!

இரு மாதங்களுக்கு முன் குடகு நிலச்சரிவில் காணாமல் போன கல்லூரி மாணவியின் உருவ பொம்மை செய்ய்யப்பட்டு இறுதிச்சடங்கு நடத்தப்பட்டுள்ளது.

கர்நாடாகாவில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள குடகுப் பகுதியில் கடந்த ஆகஸ்ட் மாதம் கடும் மழை பெய்தது. கடும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதனால் ஏராளமான மக்கள் தங்கள் உடமைகளை இழந்தனர். குடகுப் பகுதியில் ஜோடுபாலா என்னும் ஊரில் கடும் நிலச்சரிவு ஏற்பட்டது.

இந்த நிலச்சரிவில் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மரணம் அடைந்தனர். அந்த நால்வரில் 3 பேரின் உடல்கள் மட்டுமே மீட்கப்பட்டன. நான்காமவரான் மஞ்சுளா என்னும் 17 வயது கல்லூரி மாணவியின் உடல் கிடைக்கவிலை. மஞ்சுளாவின் உடலை ராணுவ வீரர்கள், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்ளிட்ட பலரும் தேடியும் அவர் உடல் கிடைக்கவில்லை.

இதனால் மிகவும் வருத்தம் அடைந்த மஞ்சுளாவின் உறவினர்கள் மற்றும் உடன் படித்த மாணவ மாணவிகள் அவருடைய உருவ பொம்மை ஒன்றை உருவாக்கினர். அந்த பொம்மைக்கு மஞ்சுளாவின் உடைகள் அணிவிக்கப்பட்டு அவர் உறவினர்கள் மற்றும் தோழிகளால் இறுதி அஞ்சலி செலுத்தப்பட்டது.

அதன் பிறகு மஞ்சுளாவின் உருவ பொம்மை அவர் காணாமல் போன இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. கூடி இருந்தோர் இந்த சமயத்தில் மிகவும் துக்கமடைந்து அழுதது அனைவருடைய மனத்தையும் உருக்கி உள்ளது.