5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துசெய்வதா அல்லது மறுசீரமைப்புக்குட்படுத்துவதா என்பது குறித்து ஆராய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று(சனிக்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியளார்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அமைச்சர், “ ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையென்பது மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவதில்லை.
அது நினைவூட்டலை பரீட்சித்துப்பார்க்கும் பரீட்சையாகும். எனினும், இப்பரீட்சைதான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்றது என எண்ணி, மாணவர்களுக்கு பெற்றோர் அழுத்தம் கொடுக்கின்றனர்.
எனவே, இப்பரீட்சை குறித்து சிந்திக்கவேண்டியுள்ளது. அது மறுசீரமைப்புக்குட்படுத்தப்படவேண்டும். இப்பரீட்சையை இரத்து செய்யவேண்டும் என சிலர் கூறுகின்றனர்.
எதுஎப்படியோ இவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று அமைக்கப்படும். அந்த குழுவின் பரிந்துரையின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும்.
இதேவேளை, “O-L , A-L பரீட்சைகளை டிசம்பர் மாதத்தில் நடத்துவது தொடர்பிலும் பரீசிலிக்கப்பட்டு வருகின்றது“ என தெரிவித்துள்ளார்.