ஹாலிவுட், பாலிவுட்டைத் தாண்டி கோலிவுட்டையும் புரட்டிப்போடத் தொடங்கியுள்ளது ‘MeToo’ புயல். இந்தப் புயலின் மையம், பின்னணிப் பாடகி சின்மயி. அந்த மரியாதை மனிதர், கவிஞர் வைரமுத்து.
ஒரு பெண் தனக்கு அனுப்பியதாக சில குறுந்தகவல்களை சந்தியா மேனன் என்ற பத்திரிகையாளர், தன் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டதுதான் இந்த விவகாரத்தின் தொடக்கப்புள்ளி.
அந்தப் பதிவில், ‘ஒரு புராஜெக்ட் விஷயமாகச் சென்றிருந்தபோது, கவிஞர் வைரமுத்து என்னிடம் தவறாக நடக்க முயற்சி செய்தார்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
சந்தியா மேனனின் அந்த ட்வீட்டை ரீட்வீட் செய்த சின்மயி, ‘வைரமுத்து பற்றி எல்லோருக்கும் தெரியும். பாடகிகளும் இதை அறிவார்கள்’ என்று பதிவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, ‘2004-ம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் ஒரு நிகழ்ச்சிக்குச் சென்ற இடத்தில், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் மூலம் வைரமுத்து என்னை தான் தங்கியிருந்த ஹோட்டலுக்கு அழைத்தார்; நான் மறுத்தேன்’ என அடுத்த ட்வீட்டைப் பதிவிட்டார் சின்மயி.
அந்த ட்வீட்டைத் தொடர்ந்து வைரமுத்துக்கு ஆதரவாகவும் எதிராகவும் பல ட்வீட்டுகள் முளைத்தன. அதுவரை கருத்து எதுவும் சொல்லாமல் அமைதிகாத்த வைரமுத்து, ‘அண்மைக்காலமாக நான் தொடர்ச்சியாக அவமானப்படுத்தப்பட்டு வருகிறேன். அவற்றுள் இதுவும் ஒன்று. உண்மைக்குப் புறம்பான எதையும் நான் பொருட்படுத்துவதில்லை’ என ட்விட்டரிலேயே பதிவிட்டார்.
சின்மயி கூறிய புகாரை அவரின் அம்மா பத்மாசினி உறுதிப்படுத்தியிருந்த நிலையில், சின்மயி சொன்ன புகாரை மறுத்து சுவிட்சர்லாந்தில் நடந்த அந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர் சுரேஷ் ஒரு வீடியோ வெளியிட்டார்.
‘‘அது ‘வீழ மாட்டோம்’ என்கிற ஆல்பம் வெளியீட்டு விழா. வைரமுத்து, பாடகர்கள் மாணிக்க விநாயகம், உன்னி மேனன், சின்மயி ஆகியோர் வந்திருந்தார்கள். சின்மயியுடன் அவரின் அம்மாவும் வந்திருந்தார்.
எல்லோரையும் நல்லபடியாக உபசரித்து, விழாவை மிகச் சிறப்பாக நடத்தி முடித்தோம். நிகழ்ச்சி நடந்த இரண்டு தினங்களும் சின்மயி, அவர் அம்மா இருவரும் என் வீட்டில்தான் தங்கியிருந்தார்கள்.
வைரமுத்து என் வீட்டிலிருந்து 100 கி.மீ தொலைவிலுள்ள இன்னொரு நகரத்தில் தங்கியிருந்தார். நிகழ்ச்சி முடிந்து அவர்கள் தமிழ்நாடு திரும்பும்வரை எந்தவொரு சம்பவமும் அங்கு நிகழவில்லை.
உண்மை இப்படி இருக்க, சின்மயி ஏன் இப்போது இப்படிப் பேசுகிறார் எனத் தெரியவில்லை’’ என வேதனையுடன் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.
சுரேஷின் இந்த வீடியோ குறித்து சின்மயி தரப்பின் கருத்தை அறிய முயன்றோம். அவரின் அம்மா பத்மாசினி நம்மிடம் பேசினார்.
‘‘சுரேஷ் நல்ல மனிதர். அவர்மீது எங்களுக்கு இப்போதும் மரியாதை உள்ளது. அவர் ஏதோவொரு நெருக்கடிக்கு ஆளாகி இப்படியொரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார்.
மறுபடியும் சொல்கிறேன், ‘MeToo’ என்பது ஓர் இயக்கம். வைரமுத்து என்கிற ஒரே ஒருவரை வைத்து மட்டும் இங்கு யாரும் எதுவும் பேசவில்லை. இந்த இயக்கம் வேகமாக முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே சின்மயியின் விருப்பம்’’ என்றார்.
வீழ மாட்டோம்’ ஆல்பம் வெளியீட்டு விழாவுக்கு வைரமுத்து, சின்மயி ஆகியோருடன் சென்றிருந்த மூத்த பாடகர் மாணிக்கவிநாயகத்திடம் பேசினோம்.
‘‘நிகழ்ச்சி நடந்த அந்த நாள்களில் நான், சின்மயி, அவரின் அம்மா மூவரும் சுரேஷ் வீட்டில்தான் தங்கியிருந்தோம்.
நிகழ்ச்சி முடிந்ததும் நானும் உன்னி மேனனும் உடனடியாக சென்னை திரும்பிவிட்டோம். வைரமுத்து அங்கிருந்து அப்படியே அமெரிக்கா செல்வதாகச் சொன்னார்கள்.
சின்மயியும் அவர் அம்மாவும் அங்கேயே சில நாள்கள் தங்கியிருந்து சுவிட்சர்லாந்தைச் சுற்றிப்பார்த்துவிட்டு வருவதாகச் சொன்னார்கள்.
அங்கிருக்கும்வரை எந்தப் பிரச்னையும் இல்லாதபோது, 14 வருடங்கள் கழித்து இப்போது இப்படியொரு செய்தி கிளம்பியுள்ளது.
சுவிட்சர்லாந்து நிகழ்ச்சிக்கு பிறகு பல நிகழ்ச்சிகளில் நாங்கள் ஒன்றாகப் பங்கேற்றுள்ளோம். கடந்த இரண்டு தினங்களாக எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருக்கிறது’’ என்றார் அவர்.
இதுகுறித்து வைரமுத்து பேச முன்வரவில்லை. அவர் தரப்பில் சிலரிடம் பேசினோம். அவர்கள் சில கருத்துக்களை முன் வைக்கிறார்கள்.
‘‘சின்மயி தெரிவிக்கும் கருத்துகளில் அடிப்படை உண்மையோ, நேர்மையோ இருப்பதாகத் தெரியவில்லை. 2004-ல் இப்படி நடந்ததாக அவரின் அம்மா சொல்கிறார்.
அதற்குப் பின்னர் பல சந்தர்ப்பங்களில் தனது ட்விட்டர் பதிவுகள் மூலம் வைரமுத்துவுக்கு சின்மயியின் அம்மா வாழ்த்துகளை அனுப்பியது ஏன்? தன் மகளை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கிற ஒரு நபரை, எப்படி அவர் சமூக வலைதளங்கள் மூலம் பாராட்ட முடியும்?
அது மட்டுமல்ல, 2014-ல் நடந்த சின்மயியின் திருமணத்துக்கு வைரமுத்து அழைக்கப்பட்டிருக்கிறார். வைரமுத்து காலில் விழுந்து ஆசிபெறுகிறார் சின்மயி.
தன்னிடம் தவறாக நடக்க முயன்ற ஒருவரை தன் திருமணத்திற்கு அழைத்தது ஏன்? அவர் மோசமானவர் எனில், அவரது காலில் விழுந்து வாழ்த்துப் பெற்றது ஏன்? மூன்று வருடங்களுக்கு முன்னர்கூட, சமூக வலைதளங்களில் தன்னைப்பற்றி அவதூறு பரப்பிய நபரைப் பற்றி காவல்துறையிடம் புகார் அளித்த சின்மயி, அதே நாளில் வைரமுத்து பற்றியும் சொல்லியிருக்கலாமே?” என்றார்கள்.
சின்மயி ‘MeToo’வில் வைரமுத்து மட்டுமின்றி, கர்நாடக சங்கீதப் பிரபலங்கள் உள்பட பலரைப் பற்றியும் ட்விட்டரில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார். ‘‘அவருக்கு வைரமுத்து மீது தனிப்பட்ட விரோதம் எதுவும் இல்லை. பெண்களிடம் அத்துமீறியவர்களை அடையாளப்படுத்த வேண்டும் என்பதே சின்மயியின் நோக்கம்’’ என்கிறார்கள் அவரை அறிந்தவர்கள்.
‘MeToo’ புகார்கள் வெறும் சர்ச்சை, பரபரப்பு என்ற அளவில் காணாமல்போவது வருத்தத்தை அளிக்கிறது. புகாரில் உண்மை இருக்கும்பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதே பெண்ணியவாதிகளின் கருத்தாக இருக்கிறது. அது நடக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– ம.அய்யனார் ராஜன்