தனக்கு வரப்போகும் மருமகள் தனக்கு மகளாக இருக்க வேண்டும் என்று மாமியார் நினைப்பதும், தனக்கு அமைய போகும் மாமியார் தனக்கு இன்னொரு தாயக இருக்க வேண்டும் என்று மருமகள் நினைப்பதும் பல பெண்களுக்கு பகல் கனவாகவே போய்விடுகிறது.
பொதுவாகவே மாமியார், மருமகள் என்றாலே எலியும், பூனையும் போல் தான். சண்டைக்கு பஞ்சமிருக்காது. இதில் தனிக்குடுத்தனம் பிரச்னை வந்துவிட்டால் வீட்டில் உள்ள ஆணின் தலையும் உருளும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை.
இந்நிலையில், சேலம் அருகே தனிக்குடுத்தன பிரச்னையில், மாமியாரும், மருமகளும் போட்டி போட்டு கொண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்று, இதில் மாமியார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட, மருமகளுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சேலம் மாவட்டம் கொண்டலாம்பட்டி பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி சரஸ்வதி. கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 5 வருடங்களாக பிரிந்து வாழ்ந்து வந்த இருவரும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒன்று சேர்ந்துள்ளனர்.
இந்நிலையில் தனிக்குடித்தனம் செல்வது தொடர்பாக மருமகள் சரஸ்வதிக்கும் அவரது மாமியார் சாந்திக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், மாமியாரும், மருமகளும் போட்டி போட்டுக் கொண்டு விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளனர்.
இவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தபோது மாமியார் சாந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மருமகள் சரஸ்வதி உயிருக்கு ஆபத்தான நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.