சபரிமலைக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல அனுமதிக்கலாம் என உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கிய நிலையில், ஐப்பசி மாத பூஜைக்காக சபரி மலை செல்ல வந்த பெண்கள் மற்றும் பெண் பத்திரிகையாளர்கள் தடுத்து நிறுத்தப்பட்டனர், இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்தும், சபரிமலை கோவிலுக்குள் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்களை அனுமதிக்கக்கூடாது என்று கேரளா முழுவதும் பெரும் போராட்டம் நடைபெற்று வருகிறது.
ஆனால் பிரனாயி தலைமையிலான கேரள மாநில கம்யூனிஸ்டு அரசு, உச்சநீதி மன்ற தீர்ப்பை அமல்படுத்த தீவிரம் காட்டி வருகிறது. இது மக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில், கோவிலுக்குள் பெண்கள் வந்தால்… என கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மாநில அரசு மற்றும் தேவசம் போர்டின் உச்சநீதி மன்ற சார்பு நிலைக்கு எதிராக பந்தளம் அரச குடும்பத்தினர் மற்றும் சபரிமலை கோவில் தந்திரிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கோவிலுக்குள் பெண் வர அனுமதிக்க மாட்டோம் என்றும் பக்தர்கள் அனுமதிக்க மாட்டார்கள் என்றும் தீவிரம் காட்டி வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று தேவசம் போர்டு சார்பில், , பந்தளம் ராஜ குடும்பத்தினர், சபரிமலை தந்திரி ஆகியோருடன் விவாதம் நடைபெற்ற வருகிறது. சுமார் 1 மணி நேரமாக விவாதம் தொடர்ந்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையில், ஐப்பசி மாத பூஜை 18ந்தேதி முதல் தொடங்க உள்ள நிலையில், பெண் பத்திரிகையாளர் உள்பட சில பெண்கள் வந்தனர். அவர்களை காவல்துறையினர் நிலக்கல் என்ற இடத்தில் தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர்.
பெண்களை அனுமதித்தால் வன்முறை வெடிக்கும் என்று சபரிமலை கோயிலின் தலைமை தந்திரி எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் அந்த பகுதியில் பரபரப்பு நிலவி வருகிறது.
இந்த சம்பவம் கேரளா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.