ஒரே நேரத்தில் விஷம் குடித்த மாமியார் மருமகள்!

சேலத்திற்கு அருகில் பெரியபுதூர் எனும் பகுதியில் வசித்து வருபவர் சுந்தரம் சாந்தி தம்பதிகள். இவர்களுக்கு மூன்று மகள்கள் மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். இதில் மூத்த  மகன் சுரேஷ்க்கு 6 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 5 வயதில் மகன் ஒருவன் உள்ளான்.

இந்நிலையில் சுரேஷுக்கும் இவரது மனைவி சரஸ்வதிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு சரஸ்வதி சில வருடங்களாக தனது பெற்றோர் வீட்டிலேயே  தங்கி இருந்துள்ளார். இதனையடுத்து இருவரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கூடிப் பேசி சுரேஷ் மற்றும் சரஸ்வதி இருவரையும் சமாதானப்படுத்தி சேர்த்து வைத்துள்ளனர்.  ஆனாலும் வழக்கம்போல மீண்டும் குடும்பத்தில் தகராறுகள் ஏற்பட்டு வந்துள்ளது.  இந்நிலையில் இரு தினங்களுக்கு முன்பு சரஸ்வதிக்கும் அவரது மாமியார் சாந்திக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டுள்ளது.

இந்த பிரச்சனை பெரிதான நிலையில் இருவரும் விஷம் குடித்து சாகப்போவதாக ஒருவரை ஒருவர் மிரட்டி உள்ளனர். உறவினர்களும் வழக்கம் போல சாதாரண பிரச்சனைதான் என கண்டுகொள்ளாமல் விட்டுள்ளனர். ஆனால் மாமியார் சாந்தி சொன்னபடியே நள்ளிரவில் விஷத்தைக் குடித்து வீட்டில் இறந்து கிடந்திருக்கிறார். தகவலறிந்த காவல்துறை உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிச்சோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதற்கிடையில் தன்னால் தான் மாமியார் விஷம் குடித்து இறந்துவிட்டார் என உறவினர்கள் குற்றம் சாட்டுவார்கள் என பயந்த சரஸ்வதி தானும் எலி மருந்தை சாப்பிட்டு மயக்கமடைந்துள்ளார். அவரை உடனடியாக மீட்ட உறவினர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.