உணர்வுகளை புரிந்து நடக்காவிட்டால் அதற்குரிய பலனை அனுபவித்தே தீரவேண்டும்.! தமிழிசை பரபரப்பு பேச்சு.!
தமிழர்களின் உணவு முறைகள் பற்றி இழிவாக பேசியதாக பஞ்சாப் அமைச்சர் சித்துவை கண்டித்து பா.ஜனதா கட்சி சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார். அப்போது, சபரிமலை விவகாரம் பற்றி தமிழிசை சவுந்தர ராஜன் பேசியபோது, சபரிமலைக்கு செல்லும் பெரும்பாலான அய்யப் பக்தர்கள் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை ஏற்றுக்கொள்ளவில்லை. கேரளா மற்றும் தமிழ்நாட்டில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. மக்களின் உணர்வுகளுக்கு புரிந்துகொள்ளவேண்டியது அரசாங் கத்தின் கடமை.
நாங்கள் சட்டத்துக்கு மதிப்பு கொடுப்பவர்கள். சட்டத்தை மீறமாட்டோம் என்று கூறும் கேரள முதல்வரும், அவர் சார்ந்த கட்சியினரும் சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியதே இல்லையா? ஜல்லிக்கட்டு போராட்டம் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது தானே. அதை ஆதரிக்க தானே செய்தார்கள். எத்தனை தொழிற்சாலைகளில் கோர்ட்டுக்கு எதிராக போராட்டம் செயகிறார்கள்.
இப்போது, சபரிமலை விவகாரத்தில் மறுசீராய்வு மனுவை தாக்கல் செய்ய மாட்டோம் என்று இருப்பது அவர்களது இந்து விரோத உணர்வை வெளிப்படுத்தியிருக்கிறது. பக்தர்களின் உணர்வுகளை புரிந்து நடக்காவிட்டால் அதற்குரிய பலனை ஆட்சியாளர்கள் அனுபவித்தே தீரவேண்டும் என்று அவர் தெரிவித்தார்.