இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் வறுமை காரணமாக பெண் ஒருவர் தமது 5 குழந்தைகளுடன் கிணற்றில் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் உள்ள பாஞ்ச் பிப்லா கிராமத்தை சேர்ந்தவர் கீதா பாலியா. இவருக்கு 5 குழந்தைகள் இருந்தன. அவர் வறுமையின் பிடியில் சிக்கித் தவித்து வந்திருக்கிறார்.
இந்த நிலையில் இவர் நேற்று அங்குள்ள ஒரு கிணற்றில் தனது 5 குழந்தைகளையும் வீசி விட்டு தானும் குதித்து விட்டார்.
இதைக் கண்ட கிராமவாசிகள் சிலர், அவர்களைக் காப்பாற்றும் நோக்கத்தில் உடனடியாக கிணற்றில் குதித்தனர்.
ஆனால் அதற்குள் 4 குழந்தைகள் உயிரிழந்தனர். கீதா பாலியாவையும், 10 வயதான மூத்த மகள் தர்மிஸ்தாவையும் மட்டுமே அவர்களால் உயிருடன் மீட்க முடிந்தது.
இறந்த குழந்தைகள் ஒன்றரை வயது முதல் 8 வயது வரையிலானவர்கள் என தெரியவந்துள்ளது.
கடந்த 2 ஆண்டுகளாக வறுமையின் பிடியில் சிக்கி, சாப்பாட்டுக்கும் வழியில்லாமல் தவித்த நிலையில், கெட்ட ஆவியின் தூண்டுதலால்தான் பிள்ளைகளை கிணற்றில் வீசிவிட்டு, நானும் குதித்தேன் என்று கீதா பாலியா விசாரணை அதிகாரியிடம் தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் வளர்ச்சியடைந்த மாநிலங்களில் குஜராத்தும் ஒன்று என பிரசாரம் செய்யப்பட்டு வரும் நிலையில் கடும் வறுமையால் பெற்ற பிள்ளைகளை கிணற்றில் வீசி, தாயாரும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.