விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா ஒலக்கூர் ஒன்றியத்திற்குட்பட்டது கீழ்ஆதனூர் கிராமம்.
இந்த கிராமத்தில் சுமார் 200 ஆதிதிராவிடர் குடும்பங்கள் வசிக்கின்றன. இங்குள்ள அரசு அங்கன்வாடி மையத்தில் 20க்கும் மேற்பட்ட குழந்தைகள் படிக்கின்றனர்.
இதற்கான கட்டிடம் கடந்த 1996-ல் கட்டப்பட்டது. இந்த கட்டிடம் பலவீனமாக இருந்ததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது.
தற்போது இந்தக் கட்டிடம் ஆங்காங்கே காரைகள் பெயர்ந்து விழும் ஆபத்தான நிலையில் இருக்கின்றன. இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
இதனால் கடந்த ஒருவாரமாக அருகே உள்ள மரத்தடியில் குழந்தைகளுக்கு பாடம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அங்கன்வாடி கட்டிடத்தின் உள்ளே உள்ள காரைகள் பெருமளவு பெயர்ந்து விழுந்துள்ளது. இடிந்த அன்று விடுமுறை என்பதால் அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படவில்லை.
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில் அங்கன்வாடி குழந்தைகள் நலன் கருதி மாவட்ட ஆட்சியர் உடனடியாக மாற்று இடத்தில் புதிய கட்டிடம் கட்டித் தரவேண்டும் என அந்த கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத் துள்ளனர்.