செல்போனுக்காக ரோட்டில் தரதரவென இழுத்துச்சென்ற கயவர்கள்!

சென்னை மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் ஜெயபாண்டியன். முதியவரான இவர் நேற்று முன்தினம் வளசரவாக்கத்தில் உள்ள அவரது ஸ்நேகிதரை பார்க்கச்சென்றுள்ளார்.

பின்னர் சிநேகிதர் வீட்டுக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த தனது மோட்டார்சைக்கிள் அருகே நின்று கொண்டிருந்தார் ஜெயபாண்டியன்.

அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர் ஜெயபாண்டியனிடம் முகவரி கேட்பதுபோல் பேச்சுக்கொடுத்துள்ளனர்.

அப்போது இருசக்கர வாகனத்தில் பின்புறமாக அமர்ந்திருந்த நபர் திடீரென ஜெயபாண்டியனின் சட்டை பாக்கெட்டில் இருந்த செல்போனை பறித்துச்சென்றனர். அவர் தனது செல்போனை மீட்பதற்காக போராடி ஒருவழியாக அந்த மர்மநபர்களின் இருசக்கரவாகனத்தை போடும்போதே பிடித்துள்ளார்.

இருசக்கரவாகனம் வேகமாக சென்றதால் சாலையில் விழுந்துள்ளார். ஆனாலும் வண்டியை விடாமல் ரோட்டில் இழுத்தபடி சென்றுள்ளார். அந்த மர்மநபர்களும் முதியவர் என்று கூட பாராமல் தரதரவென இழுத்துச்சென்றுள்ளனர்.

ஒருகட்டத்தில் நிலைதடுமாறி கீழே விழுந்த ஜெயபாண்டியனுக்கு உடலில் பல இடங்களில் காயம் ஏற்பட்டது. அவர் இருசக்கர வாகனத்தில் இழுத்து செல்லப்படும் காட்சிகள் அந்த பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது.

கண்காணிப்பு கேமராவில் பதிவான மர்மநபர்களின் உருவங்களை வைத்து அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.