அச்சுறுத்தும் ஜிகா வைரஸ்.! பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு.!

ராஜஸ்தான் மாநிலத்தில் இருக்கும் ஜெய்ப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஜிகா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருகிறது. இதனால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

சுகாதாரத்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில், ராஜஸ்தானின் ஜெய்பூர் மாவட்டத்தில் 50 பேருக்கு ஜிகா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது மருத்துவமனை பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் பெரும்பாலானவர்கள் ஜெய்ப்பூரில் இருக்கும் சாஸ்திரி நகரை சேர்ந்தவர்கள். அந்த பகுதியில் வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் முழு வீச்சில் நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன்பாக ஜிகா வைரஸால் பதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக இருந்தது. இந்த நிலையில், தற்போது இந்த எண்ணிக்கை மேலும் உயர்ந்து 61 – ஆக இருக்கிறது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இவர்களில் 11 கர்ப்பிணி பெண்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சிக்குன்குனியா, டெங்குவைத் தொடர்ந்து, கொசுக்கடியால் உண்டாகும் புதிய கிருமி தொற்றான ஜிகா வைரஸ் பாதிப்பு கடந்த 2017-ஆம் ஆண்டு ஜனவரியில் இந்தியாவில் உணரப்பட்டது.

இந்த வைரஸ் முதன்முதலில் 1947-ஆம் ஆண்டு உகாண்டாவில் இருக்கும் ஜிகா என்ற காட்டில் குரங்குகளை தாக்கியபோதுதான், இந்த வைரஸ் கிருமி பற்றி தெரிய வந்தது. சமீபகாலத்தில், 2007 மற்றும் 2013–ம் ஆண்டுகளில், பசிபிக் நாடுகளில் ஜிகா வைரஸ் தாக்கியது என்பது நினைவுகூரத்தக்கது.